தமிழகத்தில் விதைத் திருவிழா! விவசாயிகள் ஏற்பாடு!!
பெரம்பலூர் ஆண்டிமுத்து சின்னப்பிள்ளை வளாகத்தில் ஆறாம் ஆண்டு விதைத் திருவிழா வரும் ஜூலை 31 ஞாயிறு அன்று நிகழ உள்ளது. இதனைப் பெரம்பலூர் மாவட்ட இயற்கை உழவர்கள் குழு நடத்த உள்ளது. இத்திருவிழாவில் நல்ல தரமான மரபுவகை நெல், நாட்டுக்காய்கறி விதகள், கீரை விதைகள், சிறுதானிய விதைகள் ஆகியன கிடைக்கும் எனவும், மேலும் இயற்கையில் விளைந்த மரபு வகை அரிசி, சிறுதானிய அரிசி மாவு வகைகள் மற்றும் பண்டங்கள் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் கொடிசியா நிர்வாகத்திற்கு எதிர்ப்பு: விவசாயிகள் போராட்டம்
கொடிசிய நிர்வாகத்தைக் கண்டித்துக் கோவை அவிநாசி சாலையில் உள்ள அண்ணா சிலை அருகே தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் கள்ளப்பாளையம் கிராமத்த்தில் கொடிசியா நிர்வாகம் சார்பில் சுமார் 140 ஏக்கர் பரப்பளவில் தொழிற்பூங்கா கட்டப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அங்குள்ள நீர்நிலையினை அழித்துத் தொழிற் பூங்கா கட்டப்பட்டு வருவதாகத் தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தினர் குற்றம் சாட்டி, கோரிக்கை வைத்துள்ளனர்.
100 நாள் வேலை கேட்டுப் பெண்கள் போராட்டம்
திண்டிவனம் அருகே சாரம் கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தின்கீழ் வேலை வழங்க வேண்டும் என பெண்கள், ஊராட்சி அலுவலகத்தைஉ முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியுள்ளனர். 800 பேருக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின்கீழ் அடையாள அட்டை இருக்கும் நிலையில் 150 பேருக்கு மட்டுமே பணி வழங்கப்படுகிறது என்றும், இந்த செயலால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் கூறிப் போராட்டம் நடைபெற்றது. இதனை அடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர், அதிகாரிகள் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வேலை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருக்கின்றனர்.
இனி விடுமுறை நாட்களில் வகுப்புகள் கிடையாது: பள்ளிக்கல்வித் துறை உத்தரவு
நடப்பு கல்வியாண்டில் சனிக்கிழமைகளில் மாணவர்களுக்கு வகுப்புகள் இயங்காது எனப் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது. எனினும், சில பள்ளிகளில் விடுமுறை நாட்களிலும் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்படுவதாகப் புகார் எழுந்தது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கக் கூடாது எனப் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
தருமபுரியில் அதி உயர் சிகிச்சை மையம் அமைக்கத் திட்டம்!
தருமபுரி அரசு மருத்துவமனையில் அதி உயர் சிகிச்சை மையம் அமைக்கக் கோரி திமுக எம்.பியும் மருத்துவருமான திரு. செந்தில்குமார் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார். மக்களுக்கு அதி உயர் சிகிச்சை எளிதில் கிடைக்கக் கூடிய வகையில் அமைய வேண்டும் எனவும், மலிவு விலையில் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார். இதன் ஒரு பகுதியாகத் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அதி உயர் சிகிச்சை மையம் அமைக்க வேண்டி மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
குற்றாலச் சாரல் திருவிழா: சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சி தகவல்!
குற்றாலச் சுற்றுலா தளம் குறித்த மகிழ்ச்சி தகவலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் சீசன் காலமாகும். இந்த நிலையில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க அரசு சார்பாகத் திருவிழா வரும் ஆக்ஸ்ட் 5-ஆம் தேதி தொடங்கி 8 நாட்கள் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இத்திருவிழாவில் படகு போட்டி, நீச்சல் போட்டி, மலர் கண்காட்சி, பழக்கண் காட்சி, முதலானவை ஏற்பாடு செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு குற்றாலத்தில் சாரல் திருவிழா நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிஷி ஜாக்ரன் நிறுவனரின் தந்தை நினைவேந்தல் நிகழ்வு
கிரிஷி ஜாக்ரனின் நிறுவனர் எம்.சி. டாமினிக் அவர்களின் தந்தை தெய்வத்திரு செரியன் மெழுகனல் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு இன்று நடைபெற்றது. 81 வயதில் மறைந்த தெய்வத்திரு. செரியர் மெழுகனல் அவர்களின் 41 -ஆவது நாள் நினைவேந்தல் புதுதில்லி தேவாலயத்தில் நடைபெற்றது. இந்த நினைவேந்தல் நிகழ்வில் கிரிஷி ஜாக்ரன் குழுவினர் இதயப்பூர்வமான ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டனர்.
மேலும் படிக்க