News

Thursday, 15 June 2023 02:58 PM , by: Muthukrishnan Murugan

Senthil Balaji's portfolios were transferred to other ministers

அமலாக்கத்துறை சோதனையில் கைது செய்யப்பட்ட செந்தில்பாலாஜி வகித்த இரு பெரும் துறைகள் தங்கம் தென்னரசு மற்றும் முத்துசாமிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைதுறையின் அமைச்சராக பதவி வகித்த செந்தில்பாலாஜிக்கு தொடர்பான அனைத்து இடங்களிலும் அமலாக்கத் துறை நேற்று முன்தினம் சோதனை நடத்திய நிலையில் கைது செய்யப்பட்டார். அப்போது திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலியால் சென்னையிலுள்ள ஒமந்தூரார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ரத்தக்குழாயில் 3 அடைப்புகள் இருப்பதாக ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் தெரிய வந்த நிலையில், அவருக்கு பைபாஸ் சர்ஜரி செய்ய மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளார்கள்.

இதனிடையே கைதுக்கு எதிராக தொடரப்பட்ட ஜாமீன் மனுவினை நீதிமன்றம் நிராகரித்தது மட்டுமின்றி வருகிற 28-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலாகா இல்லாத அமைச்சர்:

நீதிமன்ற காவல் உத்தரவினை அடுத்து அமைச்சரவையில் மீண்டும் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக பேச்சு எழுந்தது. மின்சாரத்துறை, மதுவிலக்கு என இரு பெரும் துறைகளை கவனித்து வந்தார் அமைச்சர் செந்தில்பாலாஜி. இதனிடையே இத்துறைகள் அமைச்சரவையில் புதிய நபருக்கு வழங்கப்படுமா? அல்லது ஏற்கெனவே இருக்கும் அமைச்சரவை உறுப்பினர்களில் யாருக்காவது கூடுதல் பொறுப்பாக துறை ஒதுக்கப்படுமா என்கிற கேள்வி எழுந்தது.

தற்போது வந்துள்ள தகவலின்படி, இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி அமைச்சரவையில் தொடர்வார் என கூறப்பட்டுள்ளது. நிதித்துறை, திட்டம், மனிதவள மேலாண்மை,  ஓய்வூதியம் மற்றும் ஓய்வுக்கால நன்மைகள் மற்றும் புள்ளியியல், தொல்லியல் துறை ஆகியவற்றை கவனித்து வரும் அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு கூடுதல் துறையாக மின்சாரம், மரபு சாரா எரிசக்தி மேம்பாடு ஒதுக்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது.

அதேப்போல் வீட்டுவசதி, ஊரக வீட்டுவசதி, நகரமைப்புத்திட்டமிடல் மற்றும் வீட்டுவசதி மேம்பாடு, இட வசதி கட்டுப்பாடு, நகர திட்டமிடல் மற்றும் நகர்பகுதி வளர்ச்சித்துறை அமைச்சராக பதவி வகித்து வரும் முத்துசாமி வசம் மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் கருப்பஞ்சாற்றுக்கசண்டு துறைகள் கூடுதல் பொறுப்பாக ஒதுக்கப்படுவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

அமைச்சரைவையில் துறை மாற்றம் தொடர்பாக ஆளுநருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பரிந்துரைத்துள்ளதாக, ஆளுநர் மாளிகையிலிருந்து தகவல் கிடைத்துள்ளது. முன்னதாக மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறைகளை ஒதுக்குவதற்கு அமைச்சர்கள் இ. பெரியசாமி, மெய்யநாதன், சாமிநாதன் ஆகியோரது பெயர்கள் ஆலோசிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மிஸ்டர் க்ளீன் என கருதப்படும் தங்கம் தென்னரசு சமீபத்தில் தான் நிதித்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். அமைச்சர் முத்துசாமி மீதும் பெரிய அளவில் புகார்கள் ஏதும் இல்லாத நிலையில் இவர்களுக்கு இத்துறை ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

மேலும் காண்க:

PM கிசான்: ஒரு குடும்பத்தில் எத்தனை பேருக்கு பணம் கிடைக்கும் தெரியுமா?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)