தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் கௌதமி. இவர் மிக நீண்ட காலமாக பாஜக கட்சியில் அங்கம் வகித்து வந்த நிலையில் இன்று திடீரென கட்சி தொடர்பான அனைத்து பதவிகளிலிருந்தும் விலகுவதாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அதில் தன்னை ஒருவர் ஏமாற்றிவிட்டதாகவும், அவருக்கு பாஜக தலைவர்கள் ஆதரவாக இருப்பதும் தான் இந்த முடிவுக்கு காரணம் எனக்குறிப்பிட்டுள்ளது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை இணையதளங்களில் வைரலாகியது. அறிக்கையில் நடிகை கெளதமி குறிப்பிட்டு இருந்த முழு விவரங்கள் பின்வருமாறு-
“மிகவும் கனத்த இதயத்துடனும், ஆழ்ந்த ஏமாற்றத்துடனும் நான் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யும் முடிவை எடுத்துள்ளேன். தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான எனது முயற்சிகளுக்கு பங்களிப்பதற்காக 25 ஆண்டுகளுக்கு முன்பு நான் கட்சியில் சேர்ந்தேன். என் வாழ்க்கையில் நான் எதிர்கொண்ட அனைத்து சவால்களிலும் கூட, கட்சிக்காக பணியாற்றி வந்தேன். ஆயினும்கூட, இன்று நான் என் வாழ்க்கையில் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு நெருக்கடியான கட்டத்தில் நிற்கிறேன், கட்சி மற்றும் தலைவர்களிடமிருந்து எனக்கு எந்த ஆதரவும் இல்லை என்பது மட்டுமல்லாமல், அவர்களில் பலர் என்னை ஏமாற்றிய நபருக்கு தீவிரமாக உதவுகிறார்கள், ஆதரிக்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரியும்.
நான் 17 வயதிலிருந்தே பணிபுரிந்து வருகிறேன், சினிமா, தொலைக்காட்சி, வானொலி மற்றும் டிஜிட்டல் மீடியா என 37 வருடங்களாக எனது தொழில் வாழ்க்கை நீடித்தது. எனது வாழ்நாள் முழுவதும் உழைத்தேன், இந்த வயதில் நான் பொருளாதார ரீதியாக பாதுகாப்பாக இருக்கவும், என் மகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நிலங்களில் முதலீடு செய்தும் வைத்திருந்தேன்.
நானும் எனது மகளும் பாதுகாப்பாக இருக்க வேண்டிய கட்டத்தில் நான் இருக்கிறேன், ஆனால் திரு. சி.அழகப்பன் எனது பணம், சொத்து மற்றும் ஆவணங்களை மோசடி செய்துள்ளார் என்பதை உணர்ந்து நான் அதிர்ச்சி அடைந்துள்ளேன்.
நான் என் பெற்றோர் இருவரையும் இழந்த ஒரு அனாதை மட்டுமல்ல, ஒரு கைக்குழந்தையுடன் ஒரு தாயாகவும் இருந்த சமயத்தில் திரு. அழகப்பன் 20 ஆண்டுகளுக்கு முன்பு என்னை அணுகினார். அக்கறையுள்ள மனிதர் என்ற போர்வையில் அவர் தன்னையும் அவரது குடும்பத்தையும் காட்டிக் கொண்டார். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்தச் சூழ்நிலையில்தான் எனது பல நிலங்களின் விற்பனை மற்றும் ஆவணங்களை அவரிடம் ஒப்படைத்தேன், சமீபத்தில்தான் அவர் என்னிடம் மோசடி செய்ததைக் கண்டுபிடித்தேன். அவருடைய குடும்பத்தில் ஒரு அங்கமாக என்னையும் என் மகளையும் வரவேற்பது போல் பாசாங்கு செய்துள்ளார்.
நான் உழைத்து சம்பாதித்த பணம், சொத்துக்கள் மற்றும் ஆவணங்களை மீட்டெடுப்பதற்காக, ஒவ்வொரு இந்திய குடிமகனும் செய்ய வேண்டிய அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் நான் பின்பற்றுகிறேன். முதலமைச்சர் மீதும், காவல் துறை மீதும், நீதித்துறை மீதும் முழு நம்பிக்கை வைத்து புகார்களை அளித்துள்ளேன்.
2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின்போது, ராஜபாளையம் தொகுதியின் வளர்ச்சியை பா.ஜ.க.வுக்கு ஒப்படைத்துவிட்டு, தொகுதியில் போட்டியிட உறுதியளித்தேன். ராஜபாளையம் மக்களுக்காகவும், அடிமட்ட அளவில் பாஜகவை வலுப்படுத்துவதற்காகவும் என்னை அர்ப்பணித்தேன். எனினும், கடைசி நிமிடத்தில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு எனக்கு வழங்கப்படவில்லை. அதனையும் பொருட்படுத்தாமல், கட்சி மீதான எனது உறுதிப்பாட்டைக் காப்பாற்றினேன்.
25 வருடங்கள் கட்சிக்கு விசுவாசமாக இருந்தும், இந்த நெருக்கடி சூழ்நிலையில் முழுமையான ஆதரவு இல்லாததையும், மேலும் பாஜகவின் பல மூத்த உறுப்பினர்கள் கடந்த 40 நாட்களாக திரு.அழகப்பனுக்கு உதவி வருவதையும் காண்கிறேன். சட்டத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது. எனக்கான நீதி கிடைக்கும் என நம்புக்கிறேன்.
நான் இன்று இந்த ராஜினாமா கடிதத்தை மிகுந்த வேதனையிலும் வருத்தத்திலும் எழுதுகிறேன், ஆனால் மிகவும் உறுதியுடன் எடுத்த முடிவு இதுவாகும்” எனவும் தெரிவித்துள்ளார்.
நடிகை கௌதமியின் சொத்து அபகரிக்கப்பட்டதாக அளித்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டுள்ள அழகப்பன், அவரது மனைவி உட்பட 6 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் காண்க:
மகளிருக்கான ரூ.1000- ஏமாற்ற நினைப்பவர்களுக்கு புது செக் வைத்த அரசு