தென்காசி மாவட்டம் நெல்கட்டும்செவல் ஊராட்சியைச் சேர்ந்த விவசாயி, தன்னுடைய நிலத்தில் பணிபுரிய விவசாய கூலி ஆளுக்கு பற்றாக்குறை இருப்பதாகவும், அதனை தீர்க்குமாறும் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை கடிதம் எழுதியுள்ளார்.
விவசாய பணிகளை மேற்கொள்ளுவது நாளுக்கு நாள் சிரமத்திற்கு உள்ளாகும் நிலையில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ஒருவரின் கோரிக்கை கடிதம் இணையத்தில் வைரலாகி உள்ளது. நெல்கட்டும்செவல் ஊராட்சி, பாறைப்பட்டி என்னும் பகுதியில் வசித்து வருபவர் மகேஸ்வரன்.
4 ஏக்கர் பரப்பில் விவசாயம் செய்து வரும் மகேஸ்வரன் கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ள விவரங்கள் பின்வருமாறு- எங்கள் பகுதியில் பிப்ரவரி-ஜூன் மாத கோடைகால பருவத்திலும் செப்டம்பர்-ஜனவரியில் மழைகாலத்திலும் பயிர் செய்து வருகிறோம். இருபருவத்திலும் பயிரின் வயதுக்கு ஏற்ப முதல் 50 நாட்கள் வரை களை எடுப்பது உள்ளிட்ட பராமரிப்பு பணிக்கும், கடைசி 30 நாட்கள் வரை அறுவடைக்கும் கூலி ஆட்கள் அதிக அளவில் தேவை.
ஆனால் ஒவ்வொரு வருடமும் பயிர் பராமரிப்பு நேரத்திலும், அறுவடை நேரத்திலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் (MGNREGS) எனும் 100 நாட்கள் வேலைக்கு கிராம மக்கள் அனைவரும் சென்று வருகின்றனர். இதனால் பயிரின் முக்கிய பிரச்சனையான களையெடுப்பிற்கு ஆட்கள் கிடைக்காமல் சில வருடங்களாக நாங்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளோம். அப்படியே ஆட்கள் கிடைத்தாலும் 7 மணி நேர வேலை என்பது 100 நாள் வேலையின் காரணமாாக 4 மணி நேரமாக கருங்கி விட்டது. இதனால் பயிர் பராமரிப்பு செலவு மேலும் அதிகமாகி விட்டதால் விவசாயிகள் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளோம். நான் சுமார் 3 ஏக்கர் பரப்பில் தற்போது பருத்தி பயிர் செய்துள்ளேன். எங்கள் பகுதியில் தற்போது MGNREGS திட்ட வேலை நடைபெறுவதால் களை எடுக்க ஆட்கள் கிடைக்கவில்லை.
எனவே தங்கள் அலுவலகத்தில் உபரி ஊழியர்கள் எவரேனும் இருப்பின் அவர்களை எனது நிலத்தில் களை எடுக்க DEPUTATION-ல் அனுப்பி வைத்து உதவ தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். அவ்வாறு அவர்களை அனுப்பி வைக்கும் பட்சத்தில் அவர்களுக்கு கூலி பஞ்சப்படி(D.A), பயணப்படி (T.A) மதிய உணவு என அனைத்தையும் கொடுக்க தயாராக உள்ளேன் என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். மேலும், களைகள் சூழ்ந்த பயிர்களின் புகைப்படங்களையும் விவசாயி கோரிக்கை மனுவுடன் இணைத்துள்ளார்.
இதில் மிகவும் வேதனைக்குரிய விஷயமே கோரிக்கை மனுவின் இறுதியில், ஏன் விவசாயியாக பிறந்தோம் என்று வெந்து நொந்து போயிருக்கும் பாவப்பட்ட விவசாயி என தனது கையொப்பமிட்டுள்ளார் மகேஸ்வரன்.
மேலும் காண்க:
விவசாய மின் இணைப்பு கொண்ட மின்பாதைகளுக்கு சூரிய சக்தி- Tangedco தீவிரம்