ஆவின் நெய் தயாரிப்பதில் தொய்வு ஏற்பட்டிருப்பதாக வெளிவரும் செய்திகள் வெளியாகின்றன. ஆவின் பால் கொள்முதல் குறைந்துவருவதால் வெண்ணெய் மற்றும் நெய் தயாரிப்பதில் தொய்வு ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.
ஆவின் நெய் தட்டுப்பாட்டைச் சமாளிக்க ஆவின் நிர்வாகமும், அரசும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலதரப்பிலிருந்து கேட்டுக்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசின் கூட்டுறவு நிறுவனமான ஆவின் நிறுவனத்தில் பால் மட்டுமின்றி வெண்ணெய், நெய், பால்கோவா உள்ளிட்ட பல்வேறு பால் சார்ந்த பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
ஆவின் 1 லிட்டர் ப்ரீமியம் நெய் ரூ.630 லிருந்து ரூ.680 ஆகவும், அரை லிட்டர் நெய் ரூ.340 லிருந்து ரூ.365 ஆகவும் ஆவின் நிர்வாகம் உயர்த்தி இருந்தது. டிசம்பர் 16ஆம் தேதி முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஒன்பது மாதங்களில் மூன்றாவது முறையாக விலை உயர்த்தப்பட்டு இருந்தது.
விலை உயர்வு ஒரு பக்கம் இருப்பினும் நெய், வெண்ணெய் ஆகியவற்றுக்குத் தட்டுப்பாடும் நிலவி வருகின்றது. கடந்த தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைகளுக்கு ஆவின் நெய் அதிக அளவில் தேவைப்பட்ட நிலையில் தமிழ்நாடு முழுவதும் சிறு, குறு பாலகங்கள் வைத்து நடத்தும் பால் முகவர்களுக்கு போதிய அளவு ஆவின் நெய் வழங்கப்படவில்லை எனக் கூறப்பட்டு வருகின்றது.
தமிழகத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. ஆவின் நிறை கொழுப்பு பால் 12 ருபாய் விலையேற்ற பட்டிருந்த போதிலும் கொள்முதல் விலை உயர்வால் உற்பத்தி செலவில் 2 ருபாய் நஷ்டம் ஏற்படுகிறது.
இதன் காரணமாக ஆவின் நெய், வெண்ணெய் தயாரிப்பு குறைந்துள்ளது. உற்பத்தியாகும் நெய், வெண்ணெய் ஆகியவற்றை மொத்த வியாபாரிகள் வாங்கி ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள், சூப்பர் மார்கெட்களுக்கு விற்று வருகின்றனர், இதனால் ஆவின் பாலகங்களில் நெய், வெண்ணெய், தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
மொத்த விற்பனையாளர்களுடன் கைகோர்த்துக்கொண்டு ஆவின் விற்பனை பிரிவு அதிகாரிகள் லாபமீட்டி வருகின்றனர். துறையின் முக்கியப் புள்ளி பரிந்துரைப்படி, இந்த நடவடிக்கையில் அதிகாரிகள் இறங்கி உள்ளதால், அவர்களை தட்டிக்கேட்க முடியாத நிலைக்கு, உயர் அதிகாரிகள் தள்ளப்பட்டு உள்ளனர்என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனால், நுகர்வோர் பலர் ஏமாற்றப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆவின் பாலகத்தில் கிடைக்கும் விலையை விட சூப்பர் மார்கெட்டுகள் சற்று விலையேற்றம் செய்து விற்பனை செய்கின்றனர்.
இனியாவது, ஆவின் நெய், வெண்ணெய் உள்ளிட்டவற்றை தட்டுப்பாடின்றி வழங்க, நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
சென்னையில் ஆவின் பொருட்கள் விற்பனைக்காக, 21 மண்டல அலுவலகங்கள் உள்ளன. தற்போது, பாலில் கொழுப்பு சத்து குறைவு, எடை குறைவு போன்ற குற்றச்சாட்டுகள் வந்த நிலையில், 12 மண்டல மேலாளர்கள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
விற்பனையை அதிகரிக்கும் வகையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க
முள்ளங்கி விவசாயிகள் கண்ணீர்! - விவசாயிகளின் லாபம் ரூ.0
இந்துப்பு vs சாதாரண உப்பு : வித்தியாசத்தை அறிந்து கொள்ளுங்கள்