ஒடிசா வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (OUAT) ஊட்டச்சத்து நிறைந்த மற்றும் ஹெக்டருக்கு அதிக மகசூல் தரும் புதிய தினை ரகத்தை உருவாக்கியுள்ளது. அதற்கு 'ஸ்ரீரத்னா' (விலைமதிப்பற்ற நகை-தானியம்) எனவும் பெயரிடப்பட்டுள்ளது.
ஒடிசா மாநிலத்தின் சில மாவட்டங்களில் ஏற்கனவே சோதனை முறையில் இந்த ரகம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் தற்போது விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது.
இது காரிஃப் மற்றும் ராபி பருவங்களுக்கு ஏற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தினை ரகமானது, அரை குள்ள தாவர உயரம், நடுத்தர அளவிலான வெளிர் பச்சை இலைகள் மற்றும் வெளிர் பழுப்பு விதைகளுடன் காட்சி அளிக்கிறது. நடுத்தர முதிர்வு காலம் சுமார் 117 நாட்கள். இது பழுப்பு புள்ளி மற்றும் வேர் அழுகல் நோயை எதிர்த்து வளரும் தன்மையுடையது. வெடிப்பு நோய் மற்றும் தண்டு துளைப்பான், அஃபிஸ் மற்றும் வெட்டுக்கிளிகளால் ஏற்படும் பாதிப்பும் மிகக்குறைவாக இருக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.
மற்ற தினை ரகங்களுடன் ஒப்பிடுகையில் இது அதிக மகசூலைத் தருகிறது. மற்ற தினை வகைகளில் ஒரு ஹெக்டேருக்கு சராசரியாக 1,477 கிலோ உற்பத்தித் திறன் கிடைக்கும். ஆனால், (small millets by the Centre for Pulses Research and department of Plant Breeding and Genetic ) துறையால், அகில இந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சித் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட 'ஸ்ரீரத்னா' தினை ரகமானது சராசரியாக ஹெக்டேருக்கு 2,350 கிலோ மகசூல் அளிக்கும் எனக் கூறப்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு வருமானம் பெருகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
OUAT- டீன் (ஆராய்ச்சி) பேராசிரியர் சுசந்த குமார் ஸ்வைன் தெரிவிக்கையில், மற்ற தேசிய மற்றும் உள்ளூர் வகைகளுடன் ஒப்பிடுகையில், ’ஸ்ரீரத்னா' தினை ரகமானது அதிக இரும்புச் சத்து (50.2 mg/kg) மற்றும் துத்தநாகத்தை (21.6 mg/kg) உள்ளடக்கி இருப்பதால், அதிக ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து நன்மைகளைக் கொண்டுள்ள ரகமாகவும் திகழ்கிறது.
இவற்றில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், இந்த வகையான தினையை உட்கொள்வது கொலஸ்ட்ராலைக் குறைக்கவும், எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கவும், குளுக்கோஸை உறுதிப்படுத்தவும் உதவும். இது நீரிழிவு நோயாளிகளுக்கு முக்கியமானது மற்றும் இதய நோய் மற்றும் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும் என்று பேராசிரியர் ஸ்வைன் கூறினார். ஐக்கிய நாடுகள் சபை இந்த ஆண்டை ‘தினை ஆண்டு’என்று அறிவித்துள்ளது. இதற்கு உலகின் 22 நாடுகள் ஆதரவளிக்கின்றன.
IIMR (Indian Institute of Millets Research) நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள விவசாயிகள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு தினை உற்பத்தி மற்றும் அதன் வியாபார உத்திகளை ஊக்குவித்து பயிற்சி அளிக்கிறது. உலகின் இன்றைய மிகப் பெரிய சவாலாக மாற இருக்கும் ஊட்டச்சத்து குறைபாடுக்கு தினையில் தயாரிக்கப்படும் உணவு முறைகள் ஒரு சிறந்த தீர்வாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதையும் காண்க:
தமிழக தென்னை விவசாயிகளுக்கு சூப்பரான ஹேப்பி நியூஸ்!
ரேசன் கடைக்கு பொருள் வாங்க குடும்பத்தோடு வரணுமா? அமைச்சர் விளக்கம்