அன்பைப் பரிமாறிக்கொள்ள ஆயிரம் வழிகள் உள்ளபோதிலும், பாசத்தை வெளிப்படுத்த, ஒரு பண்டிகை என்றால், அது ரக்க்ஷா பந்தன் தான்.
சகோதர பந்தத்தை மென்மேலும் இணைக்கவும், பலப்படுத்தவும் கொண்டாடப்படுவதுதான் ரக்க்ஷாபந்தன். ஹிந்தி காலண்டர் படி, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் அதாவது, ஷ்ரவன் மாதத்தில் வரும் முழு நிலவு நாளில் கொண்டாடப்படுகிறது.
இப்பண்டிகையை, ராக்கி என்றும் அழைப்பர். இந்த நன்னாளில், பெண்கள் புதிய ஆடைகள் அணிந்து, தாம் சகோதரராக நினைக்கும் ஆண்மகனது நெற்றியில் குங்குமமிட்டு, இனிப்புகள் வழங்கிய பின்பு, மணிக்கட்டில் ராக்கி என்னும் புனிதக் கயிற்றைக் கட்டுவர். இதற்கு பதிலாக, சகோதரர்களும், தங்களது பாசத்தை தெரிவிக்கும் விதமாக அவர்களுக்குப் பல பரிசுப் பொருட்களையும், ஆசிர்வாதங்களையும் வழங்குவர். அண்ணன்- தங்கை உறவை மேலும் பலப்படுத்தி, இனிக்க வைக்கும் பண்டிகையே ரக்க்ஷாபந்தன்.
வரலாற்றில் ராக்கி
பாண்டவர்களின் மனைவியான திரௌபதி, போர்க்களத்தில் கிருஷ்ணனுக்கு காயம் ஏற்பட்டபோது, வடிந்த இரத்தத்தைத் தடுப்பதற்காக, அவரது புடவையின் ஒரு பகுதியைக் கிழித்து, கிருஷ்ணனின் மணிக்கட்டில் கட்டினார். இந்நிகழ்வு, கிருஷ்ணரின் ஆழ்மனதைத் தொட்டதால், அவர் திரௌபதியைத் தனது சகோதரியாக ஏற்றுக்கொண்டு உறுதி பூண்டார். மேலும், தீயசக்திகளிடமிருந்தோ, ஏதாவது பிரச்சனை ஏற்பட்டாலோ, அவரைப் பாதுகாப்பதாகவும் அவருக்கு உறுதியளித்தார்.
அவ்வாறு, தாம் அளித்த உறுதியைக் காப்பாற்றும் விதமாக, சூதாட்டத்தில் கௌரவர்களிடம் பாண்டவர்கள் தோற்றதால், திரிதராஷ்டிரனால், திரௌபதி துகில் உரியப்பட்ட நேரத்தில் ஆடை அளித்து திரௌபதியின் மானத்தைக் காப்பாற்றினார், பகவான் கிருஷ்ணன்.இந்த விழா வட இந்தியாவில் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.
பாதுகாப்பு பந்தம்
ரக்க்ஷாபந்தன் என்றால் பாதுகாப்பு பிணைப்பு என்றும், பாதுகாப்பு பந்தம் என்றும் பொருள். இதன்படி ரக்க்ஷாவைக் கட்டிக்கொள்ளும் ஆண், தாம் சகோதரியாக ஏற்றுக்கொள்ளும் அந்தப் பெண்ணின் வாழ்க்கை முழுவதுமான பாதுகாப்பிற்கும், நலத்துக்கும் என்றென்றும் காவலாக இருப்பேன் என்று உறுதி கூறுவதைப் போன்றதாகும்.
காட் பிரதர்ஸ்
இந்தியாவின் கலாச்சாரப் பெருமையை எடுத்துக்கூறும் இந்த சிறப்பான நாளில் தனக்கு தெரிந்தவர்களை மட்டுமல்ல, அறிமுகமே இல்லாத காவலர்கள், ராணுவ வீரர்கள் என எல்லோரையும் கூட சகோதரராக எண்ணி ராக்கி கயிற்றைக் கட்டும் வழக்கம் உண்டு. குறிப்பாக, வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவில், சகோதரிகளே இல்லாத ஆண்களை காட் பிரதர்ஸ் (God Brothers) என்று குறிக்கும் விதமாக, அவர்களுக்குப் பல பெண்கள் ராக்கி கட்டுவார்கள்.
அந்த வகையில் வரும் 3ம் தேதி ரக்க்ஷா பந்தன் பண்டிகை கொண்டாப்பட உள்ளது. இந்த பண்டிகைக்காக பெண்கள் பலரும் தயாராகி வருகின்றனர்.
இம்முறை அனைவரும் கொரோனா ஊரடங்கில் சிக்கியிருப்பதால், கடைக்குச் சென்று விதவிதமான ராக்கிகளை வாங்கி வரமுடியாத சூழல் உள்ளது. இதனைக் கருத்தில்கொண்டு, வீட்டிலேயே உள்ள பொருட்களைக் கொண்டு ராக்கி தயாரிக்க இதோ சில டிப்ஸ்!
கற்பனை ஓவிய ராக்கி
தேவைப்படும் பொருட்கள்
கத்திரிக்கொல்,
வெல்வட் துணி
ஃபேப்ரிக் கம்
வண்ணச் சாயம்
ராக்கி கயிறு
செய்முறை
வெல்வட் துணியின் சிறுபகுதியை வெட்டி எடுத்துக்கொள்ளவும். இதனை மேலே உள்ள படத்தில் காட்டியுள்ள படி, முதலில் இரண்டாகவும், பிறகு மூன்றாகவும் மடித்து வைத்துக்கொள்ளவும். 4-வதாக அதனை சிறு செவ்வகப் பெட்டி போல் மாற்றவும். அந்த செவ்வகத்தில் உங்களுக்கு பிடித்த வாசகங்கள், கற்பனை ஓவியங்கள், முத்திரைகள் உள்ளிட்டவற்றை உருவாக்கி, ராக்கி கயிற்றில் ஒட்டி விடவும். இதனைத் தயாரிக்க 20 முதல் 30 நிமிடங்கள் ஆகும்.
பேட்ச் ஒர்க் ராக்கி
தேவையான பொருட்கள்
மரஅட்டை
சார்ட் பேட்டர் அல்லது வண்ணத்துணி
ராக்கிக்கயிறு
ஃபேப்ரிக் கம் (Fabric gum)
செய்முறை
மரஅட்டையில் 4க்கு 4 இன்ச் அளவில், வட்டமாக வரைந்து வெட்டி எடுத்துக்கொள்ளவும். அதில் மடிப்புகளை உருவாக்க மேலே உள்ள படத்தில் காட்டியதுபோல் வெட்டி வைத்துக்கொள்ளவும்.
அதே அளவுக்கு சார்ட் பேப்பர் அல்லது வண்ணத்துணியையும் வெட்டி ஒட்டிக்கொள்ளவும்.
பின்னர் உங்களுக்கு பிடித்த டிசைன்களை சார்ட் பேப்பரில் வரைந்து , டிசைன் செய்து, ராக்கியின் மேல் அலங்கரிக்கவும். இதனை செய்ய 20 நிமிlங்கள்தான் ஆகும்.
ராக்கிக் கயிறு
தடிமனான கயிறுகளை எடுத்து, தாங்கள் விரும்பும் வண்ணத்தை அதில் பூசிக்கொள்ளவும். பிறகு 3 கயிறுகளைக் கொண்டு பின்னல் போட்டுக்கொள்ளவும்.
இரண்டு கயிறுகளைக் கொண்டு இடைவெளி விட்டு முடி போட்டும் ராக்கிகளைத் தயார் செய்துகொள்ளலாம்.
இவ்வாறாக நாம் விரும்பும் விதத்தில், நமக்கு பிடித்த டிசைன்களில் ராக்கியைத் தயாரித்து, ரக்க்ஷா பந்தன் அன்று ராக்கி கட்டுவது என்பது நமக்குப் புது அனுபவத்தைக் கொடுக்கும்.
மேலும் நாமே தயாரித்த ராக்கி என்று சொல்லும்போது, பெருமையாகவும், தனி கவுரவமாகவும் இருக்கும். இவ்வாறாகத் தயாரிக்கும் ராக்கிகள், தனித்துவம் வாய்ந்தவை என்பதால், நாம் சகோதரராக நினைக்கும் ஒருவருக்கு கொடுக்கும் மறக்கமுடியாத பரிசாகவும் மாறும்.
எனவே ரக்க்ஷா பந்தன் பண்டிகைக்கு நாமும் இந்த ஆண்டு வித்தியாசமான ராக்கியோடு தயாராவோம்.
மேலும் படிக்க...
மழையைக் காசாக்க நீங்க ரெடியா?- அப்படியென்றால் இது உங்களுக்கான டிப்ஸ்!
துரத்தித் துரத்திக் கடிக்கும் அவற்றிடம் சிக்கிக்கொள்கிறீர்களா ?- தப்பித்துக்கொள்ள எளிய வழிகள்!