தமிழ்நாட்டின் முதல்வரும், திமுகவின் தலைவருமான மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் “ ஸ்டாலினின் எதிரி கலைஞர் தான் “ என நடிகையும், ஆந்திர அமைச்சருமான ரோஜா பேசியது தொண்டர்களிடையே கரவொலியை ஏற்படுத்தியது.
திமுகவின் தலைவரும், தமிழ்நாட்டின் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தனது 70 வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும், அரசு அதிகாரிகளும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். திமுக சார்பிலும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே திமுக சென்னை கிழக்கு மாவட்டம் சார்பாக துறைமுகம் சட்டமன்ற தொகுதி- இராஜா அண்ணாமலை மன்றத்தில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், கரு.பழனியப்பன், எம்.பி தயாநிதி மாறன், நடிகையும்- ஆந்திராவின் சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சருமான ரோஜா பங்கேற்று முதல்வர் மு.க.ஸ்டாலினை வாழ்த்தி பேசினார்.
விழாவில் அமைச்சர் ரோஜா ஸ்டாலின் முன் மிகப்பெரிய எதிரி ஒருவர் இருக்கிறார். அவர் யார் தெரியுமா? என குறிப்பிட்ட போது அங்கிருந்த பொதுமக்களிடையே ஆர்வத்தை தூண்டியது. தொடர்ந்து பேசிய அமைச்சர் ரோஜா, “பொதுவாக பெண்களுக்கு நல்லது செய்யும் நபர்களை எனக்கு பிடிக்கும். தமிழக பெண்களுக்கு ஸ்டாலின் சார் நல்ல திட்டங்களை தொடர்ச்சியாக வழங்கி வருகிறார். தமிழக மக்கள் நினைத்தவாறு முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். ஆனால், இப்போது அவர் முன் மிகப்பெரிய சவால் உள்ளது. ஸ்டாலின் சார் முன் மிகப்பெரிய எதிரி ஒருவர் இருக்கிறார். அவரை வென்றால் மட்டுமே, ஸ்டாலின் சார் வெற்றிகரமான முதல்வராக வலம் வருவார். அந்த எதிரி யார் தெரியுமா?” என கேள்வி எழுப்பிய ரோஜா, “அந்த எதிரி கலைஞர் தான். கலைஞர் தமிழகத்துக்கு பல்வேறு சாதனை திட்டங்களை தந்தவர். அவரை மிஞ்சி, அவரைத் தாண்டி மக்களுக்கு பல்வேறு நன்மைகளை செய்தால் தான் ஸ்டாலின் வெற்றிகரமான முதல்வராக வலம் வரமுடியும்” என்றார்.
மேலும் தன் பேச்சில் ஸ்டாலினை, ஆந்திராவின் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியுடன் ஒப்பிட்டு பேசினார். அவர் கூறியதாவது, “ஆந்திரா மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி அரசியலுக்கு வருகையில் அவரின் தந்தையோடு அனைவரும் ஒப்பிட்டு பேசினார்கள், அவரது தந்தை ஆற்றிய பணிகளை போல ஜெகன்மோகனால் செய்ய முடியாது எனவும் குறிப்பிட்டு விமர்சித்தார்கள். ஆனால், இன்று ஜெகன்மோகன் முதல்வராக ஆன பின் தனது அப்பாவை மிஞ்சி நல்ல திட்டங்களை அமல்படுத்துகிறார் என பெயரெடுத்துள்ளார்.” இதனைப்போல் தமிழக முதல்வரும், கலைஞரை விஞ்சி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிப்பார் என பேசினார். இதற்கு அங்கிருந்த பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
முன்னதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட வாழ்த்து வீடியோ, ஸ்டாலின் குறித்த நடிகர் கமலின் வாழ்த்து செய்தி ஆகியவை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண்க:
மார்ச் 20-ல் தமிழ்நாடு பட்ஜெட்- உரிமைத்தொகை உட்பட எதையெல்லாம் எதிர்ப்பார்க்கலாம்?