சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் பொதுமக்களுக்கு வெளியிட்டுள்ள முக்கியமான அறிவிப்பு ஒன்றினால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இனிமே மெட்ரோ இரயிலில் பயணிப்பவர்களுக்கான காத்திருப்பு நேரம் குறையும் என்பது தான் அந்த மகிழ்ச்சியான செய்தி.
பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, சுற்றுச்சூழல் மாசுபாட்டினை கட்டுக்குள் வைக்கும் வகையில் பொது போக்குவரத்தினை பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்த அரசின் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. சென்னை போன்ற மாநகரங்களில் மெட்ரோ சேவையினை பொதுமக்கள் பயன்படுத்தும் தன்மையும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் கடந்த மாதம் அக்டோபர் முடிய, சுமார் 7,51,67,277 பயணங்கள் சென்னை மெட்ரோ இரயில் மூலம் நடைப்பெற்றுள்ளது. சென்னையில் மெட்ரோ இரயில் விரிவாக்க பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வரும் நிலையில் இனி வரும் காலங்களில் சென்னையின் பிராதான போக்குவரத்து சேவையாக சென்னை மெட்ரோ இரயில் மாறும் என கணிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தான் CMRL புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.
இதுத்தொடர்பாக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அதிகரித்து வரும் மெட்ரோ இரயில் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு மற்றும் அவர்களின் காத்திருப்பு நேரத்தை குறைப்பதற்காகவும் இரண்டு வழித்தடங்களிலும் நெரிசல் மிகு நேரங்கள் இல்லாது மற்ற நேரங்களில் 9 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ இரயில் சேவைகள் வருகின்ற 27.11.2023 முதல் 7 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இந்த அறிவிப்பிற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் தான், இங்கிலாந்தின் லண்டன், வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் நடைபெற்ற க்ரீன் ஆப்பிள் சுற்றுச்சுழல் விருது ( Green Apple Environment Awards) நிகழ்வில் கார்பன் குறைப்பு பிரிவின் கீழ் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தங்கம் வென்றது. CMRL சார்பாக இந்த நிகழ்வில் பங்கேற்ற டாக்டர் ராஜீவ் கே ஸ்ரீவஸ்தவா, ஐஎஃப்எஸ் (ஓய்வு), தலைமை ஆலோசகர் (சுற்றுச்சூழல்), சிஎம்ஆர்எல் நிறுவனம் விருதினை பெற்றுக்கொண்டார்.
காற்றின் தரத்தை மேம்படுத்துதல், சுற்றுச்சூழல் வளங்களை பாதுகாத்தல், சூரிய சக்தியை அதிக அளவில் பயன்படுத்துதல் மற்றும் சுற்றுச்சூழலை மேம்படுத்த சுற்றுச்சூழல் ரீதியாக தோட்டங்களை உருவாக்குதல் போன்ற சுற்றுச்சூழல் முயற்சிகளிலும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
பயணிகளை கவரும் வகையில் புதிய தொழில்நுட்ப முறைகளை பயன்படுத்தியும், பயணச்சீட்டு சலுகை அறிவிப்பினையும் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. டெல்லியைத் தொடர்ந்து சென்னையில் மெட்ரோ சேவையினை பொதுமக்கள் பயன்படுத்தும் நடைமுறை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் காண்க:
வேளாண் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களில் காலிப்பணியிடம்- முழு விவரம் காண்க
CMRL: க்ரீன் ஆப்பிள் விருதை வென்று அசத்திய சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம்