News

Tuesday, 19 January 2021 09:59 AM , by: Daisy Rose Mary

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையிலான பிரச்சனையை தீர்க்க உச்ச நீதிமன்றம் அமைத்த 4 பேர் கொண்ட குழு இன்று முதல் முறையாகக் கூடுகிறது.

மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் விளைபொருள் வர்த்தக சட்டம், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்திரவாதம் அளிக்கும் சட்டம், அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டம் ஆகிய 3 சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

பேச்சுவார்த்தை தோல்வி

இந்த சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் ஒரு மாத காலத்திற்கும் மேலாக போராடி வருகின்றனர். பலகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற போதிலும் சுமூக உடன்பாடு எட்டப்பாத நிலையில், மத்திய அரசு, வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்து வருகிறது.

உச்சநீதிமன்றம் தீர்ப்பு

இந்நிலையில், வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் விவசாயிகளின் போராட்டம் தொடர்பாகவும் பல்வேறு தரப்பினர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 11-ம் விசாரணைக்கு வந்தது. அப்போது, வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்த இடைக்காலத் தடைவிதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், வேளாண் சட்டங்கள் குறித்த கவலைகள், பிரச்சினைகள் குறித்து தெரிவிக்கவும், சிக்கல்களைக் களையவும் 4 பேர் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது.

சிறப்பு குழு உறுப்பினர்கள்

பாரதிய கிசான் யூனியன் தேசிய தலைவர் பூபேந்தர் சிங் மான், ஷேத்கேரி சங்காதனா (மகாராஷ்டிரா) தலைவர் அனில் கான்வாட், சர்வதேச உணவுக் கொள்கை ஆய்வு மையத்தின் தெற்காசியஇயக்குநர் பிரமோத் குமார் ஜோஷி, வேளாண் பொருளாதார வல்லுநர் அசோக் குலாட்டி” ஆகியோர் அந்தக் குழுவில் இடம் பெற்றனர்.

இதனிடையே, பாரதிய கிசான் யூனியன் தலைவர் பூபேந்தர் சிங் மான் அந்த குழுவில் இருந்து விலகிக்கொள்வதாக கடந்த வாரம் அறிவித்தார். எனவே பூபேந்தர் சிங் மான் அந்த குழுவில் தொடர்ந்து செயல்படுவாரா என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.

இன்று கூடுகிறது சிறப்புக் குழு

இந்நிலையில், உச்சநிதிமன்றம் அமைத்த குழுவில் இடம்பெற்றுள்ள ஷேத்கேரி சங்காதனா (மகாராஷ்டிரா) தலைவர் அனில் கான்வாட், சர்வதேச உணவுக் கொள்கை ஆய்வு மையத்தின் தெற்காசிய இயக்குநர் பிரமோத் குமார் ஜோஷி, வேளாண் பொருளாதார வல்லுநர் அசோக் குலாட்டி ஆகிய 3 உறுப்பினர்களும் இன்று சந்திக்க உள்ளனர். டெல்லியில் புசா வளாகத்தில் முதல்முறையாகச் இந்த சந்திப்பு நடக்க இருக்கிறது.

ஜன21 முதல் குழு செயல்படும்

இது குறித்து ஷேத்கேரி சங்காதனா (மகாராஷ்டிரா) தலைவர் அனில் கான்வாட் பேசுகையில், வரும் 21-ம் தேதியிலிருந்து குழு வழக்கமாகச் செயல்படும், எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்த விதிமுறைகள் வந்துள்ளன. விவசாயிகளும், மத்திய அரசும் ஒருபுறம் பேச்சு நடத்தும்போது, நாங்கள் அவர்களுடன் தனியாகப் பேச்சுநடத்துவதில் எந்த சிக்கலும்இல்லை. பூபேந்திர சிங் மான் குழுவில் விலகியுள்ளாதாகத் தெரிவித்த நிலையில், புதிதாக யாரையும் உச்ச நீதிமன்றம் நியமிக்கவில்லை என்றார்.

மேலும் படிக்க

PKVY : புதிய முறையில் இயற்கை விவசாயத்திற்கு ரூ.50,000 வழங்கும் மத்திய அரசு! முழு விபரம் உள்ளே!

பயிர்க் காப்பீடு இழப்பீடு தொகை - விவசாயிகள் வங்கிக்கணக்கில் ரூ.1.12 கோடி வரவு!

மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் - சிறப்பு முகாமில் பங்குபெற விவசாயிகளுக்கு அழைப்பு!

 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)