பிரதமரின் கிசான் நிதி திட்டத்தில் நடைபெற்ற முறைகேடு குறித்து விசாரணை நடத்த தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைகண்ணு உத்தரவிட்டுள்ளார்.
பிரதமரின் கிசான் சம்மான் நிதி (PM-Kisan Samman Nidhi Yojana) திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு மூன்று தவணையாக ஆண்டுக்கு ரூ.6000 வழங்கப்படுகிறது. இந்த பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்பட்டு வருகிறது. இதற்கான 6-வது தவணையாக ரூ.17,793 கோடியை அண்மையில் பிரதமர் மோடி விடுவித்தார்.
பி.எம் கிசான் திட்டத்தில் முறைகேடு
இந்நிலையில், தமிழகத்தின் திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாயிகள் அல்லாதோர் பலர் இந்த திட்டத்தில் முறைகேடாகச் சேர்க்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், பி.எம் கிசான் திட்டத்தில் விவசாயிகளைச் சேர்க்கும் பணிகள் தாற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதேபோல் கடலூரில் கிசான் திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ள 72 ஆயிரம் பேரில் 40 ஆயிரம் பேர் விவசாயிகள் அல்லாதவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக விசாரணைக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
வேளாண் துறை செயலாளர் ஆலோசனை
இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படையில், பிரதமரின் கிசான் நிதி உதவி திட்ட முறைகேடு குறித்து 13 மாவட்ட ஆட்சியர்களுடன் வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஆலோசனை நடத்தினார்.
அந்த ஆலோசனையில், ஏப்ரல் 1ம் தேதிக்குப் பிறகு திட்டத்தில் சேர்க்கப்பட்டவர்கள் பற்றிய முழு விவரங்களை 1 வாரத்திற்குள் ஆய்வு செய்யும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கிசான் திட்டத்தில் முறைகேடாகச் சேர்ந்து இருப்பவர்களை உடனடியாக திட்டத்தில் இருந்து நீக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விசாரணைக்கு உத்தரவு
இதனிடையே தமிழகத்தில் பிரதமரின் கிசான் திட்டத்தில் நடந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்த தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைகண்ணு உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்,கிசான் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எடுக்கப்படும், கிசான் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற பதிவு செய்தவர்களின் விவரங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன. விவசாயிகளின் கிசான் திட்டத்தில் இனி தவறு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும் படிக்க...
தரமான காய்கறி விதைகள் உற்பத்திக்கு மானியம் - தோட்டக்கலைத் துறை!!
வியாபாரச் சான்றிதழ் இல்லாத வணிகர்களும் PM SVANidhi திட்டத்தில் பயன்பெறலாம்!!
விநாயகர் சதுர்த்தி: பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க அரசு தடை