Tamil Nadu employment scheme offers disabled people!
வேலைவாய்ப்பு திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்குக் கல்வி, வயதுக்கான விதிகளை தளர்வு செய்து, அரசாணை வெளிவந்துள்ளது. தமிழக அரசின் நிதியின் கீழ், 2011 முதல் வேலைவாய்ப்புகள் உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகபட்சமாக, 55 வயது வரை என உயர்த்தியும், எட்டாம் வகுப்பு கல்வித் தகுதி கட்டாயம் இருக்க வேண்டும் என்ற விதியை நீக்கியும், தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த புதிய அரசாணையை, மாற்றுத் திறனாளிகள் நலச் சங்கத்தினர் வரவேற்றுள்ளனர்.
காய்கறிகள் சாகுபடி செய்ய ரூ. 20,000 மானியம் அறிவிப்பு!
பழங்கள், காய்கறிகள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 20,000 ரூபாய் மானியமாக வழங்கப்படும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தென்காசியின் குத்துக்கல்வலசை கிராமத்தில் விவசாயிகள் மற்றும் நுகர்வோர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க ஏதுவாக உழவர்சந்தை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில், தென்காசி உழவர்சந்தை நிர்வாக அலுவலர் ராமச்சந்திரன் பங்கேற்று, அரசின் மானியத்திட்டங்கள் குறித்துப் பேசிய அவர் விவசாயிகளுக்குக் காய்கற்கள், பழங்கள் சாகுபடி செய்ய ரூ. 20 ஆயிரம் மானியமாக வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
விவசாயக் கடன் தள்ளுபடி அரசின் புதிய அறிவிப்பு!
விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என மாநில அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு விவசாயிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளில் முதலமைச்சர் ரங்கசாமி பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் முக்கியமானது, புதுச்சேரியில் விவசாயிகள் வாங்கிய ரூ.13 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பு ஆகும். இதோடு,மஞ்சள் குடும்ப அட்டைதாரர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம் வழங்கப்படும், 70 முதல் 80 வயது வரையிலான முதியோர்களுக்கு உதவித்தொகை ரூ.500 உயர்த்தி வழங்கப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சமையல் எண்ணெய் விலை உயர்வு
சமையலுக்குப் பயன்படுத்தக்கூடிய கடலை எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் விலை அதிகரித்துள்ளது. விருதுநகர் எண்ணெய் சந்தையில் கடந்த 2 வாரங்களாக 315 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் நல்லெண்ணெயின் விலை தற்போது 20 ரூபாய் அதிகரித்து 335 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 205 ரூபாயாக இருந்த கடலை எண்ணெய் விலை ரூ.10 அதிகரித்து 215 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
மேலும் படிக்க