தமிழகத்தில் கொரோனா தொற்றக் காரணமாக இதுவரை 78% சதவீத சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாகச் சென்னை ஐ.ஐ.டி. நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாகத் தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இது தற்போது வரும் ஜூலை 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் தமிழகத்தில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பாதிப்புகள் மற்றும் ஊரடங்கு முடிந்த பிறகு நிறுவனங்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கை என்ன என்பது குறித்து சென்னை ஐ.ஐ.டி. (Indian Institutes of Technology) நிறுவனம் ஆய்வு நடத்தியுள்ளது.
74 சதவீத வருவாய் இழப்பு (74 percent revenue loss)
இந்த ஆய்வில் கொரோனா ஊரடங்கு நாட்களில் தமிழகத்தில் சுமார் 74 சதவீத சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் 80 சதவீதம் வருவாய் இழப்பைச் சந்தித்து இருப்பதாகத் தெரியவந்துள்ளது.இதில் சுமார் 31 சதவீத சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கடன் கொடுப்பவர்களைச் சார்ந்து இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் 78 சதவீத நிறுவனங்கள் தற்போது மூடப்பட்டு தான் இருப்பதாகவும். இந்த நிறுவனங்களில் 79 சதவீதம் பெருமளவில் பாதிக்கப்பட்டவையாக உள்ளதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொழில் பாதிப்பு காரணங்கள் (Factors Affects Industries)
சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் பொருட்களை வாங்குவோர் பாக்கித்தொகையை மிகத் தாமதமாக வழங்குவதால் தொழில்கள் முடங்குவதாக 41.38 சதவீத நிறுவனங்களும், சரக்கு போக்குவரத்து முடங்கியிருப்பதால் தொழில்கள் நலிவடைந்து இருப்பதாக 27 சதவீத நிறுவனங்களும் தெரிவித்துள்ளன.
வேலைக்குத் திரும்பாத ஊழியர்களின் உடல்நலக்குறைவு, சுகாதாரம் போன்ற காரணங்களும் தொழில் பாதிப்புக்கான காரணமாக இருக்கின்றன.முன்பே கொடுக்கப்பட்ட ஆர்டர்களும் ரத்து செய்துள்ளதாக 50 சதவீத நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக நிறுவனங்கள் பல பிரச்சினைகளை சந்தித்து சீர்குலைந்து இருப்பதாகவும், 38 சதவீத நிறுவனங்கள் ஏற்கனவே ஒப்புக்கொண்ட ஆர்டர்களை முடிக்கமுடியாமல் நெருக்கடியில் இருப்பதாக கூறுகின்றனர்.
நிறுவனங்களை மூடும் எண்ணம் இல்லை (No intention of shutting down)
தற்போது ஏற்பட்டுள்ள இந்த கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து பாதிப்பில் மீண்டு வர சுமார் 3 மாதங்கள் ஆகும் என 14 சதவீத நிறுவனங்களும் 6 மாதங்கள் வரை ஆகும் என 12 சதவீத நிறுவனங்களும் கூறியுள்ளன. ஆனால் இது போன்ற காரணங்களால் நிறுவனங்களை மூடும் எண்ணம் இல்லை என்று 68 சதவீத நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில் மீண்டும் பெருவெள்ளம் ஏற்பட வாய்ப்பு - ஐ.ஐ.டி ஆய்வு!
இந்த காலகட்டத்தில் நிறுவனங்களின் வருவாய் இழப்பு 50 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை இருப்பதாக இதன் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 74 சதவீத நிறுவனங்கள் 80 சதவீதத்துக்கு மேல் வருவாய் இழப்பைச் சந்தித்து இருப்பதாகக் கூறியிருக்கின்றனர்.
நிலையை சமாளிப்பது எப்படி (How to deal with)
தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையைப் போக்க நிதி மற்றும் பணப்புழக்கம் போன்றவற்றில் கொள்கை முடிவுகள் எடுக்காவிட்டால் ஊழியர்கள் வேலை இழப்பு மற்றும் நிறுவனங்கள் பெரிய அளவில் மூடப்படும் அபாயம் உள்ளது.
கடன் தவணை பெறுவது, வட்டிச்செலுத்துவது உள்ளிட்டவை சில காலத்துக்குத் தள்ளிவைக்கவேண்டும். சிறு, குறு நிறுவனங்களுக்கு ஏற்ற சிறப்பு மின்கட்டண சலுகை அளிக்கப்படவேண்டும் உள்பட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டால் இந்த நிறுவனங்களை மீட்டு எடுக்க முடியும் என்று ஐ.ஐ.டி நடத்திய ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் சுமார் 1,200 சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 13ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள்
பயிர் காப்பீடு திட்டம் : கடந்த ஆண்டில் ரூ.68.91 கோடி இழப்பீடு வழங்கி அரசு நடவடிக்கை!