தமிழகத்தில் தனியார் பால் பிராண்டுகள் பால் விலையை லிட்டருக்கு ரூ.4 வரை உயர்த்தியுள்ளன. ஆவின் பால் மற்றும் இதர பிராண்டுகளின் விலையில் லிட்டருக்கு ரூ.20 வித்தியாசம் இருந்ததாகவும், தனியார் பால் நிறுவனங்கள் கொள்முதல் விலையாக ரூ.51 வரை வழங்குவதாகவும் பால் பண்ணையாளர்கள் மற்றும் வியாபாரிகள் கூறுகின்றனர்.
தமிழகத்தில் தினமும் சுமார் 2.25 கோடி லிட்டர் பால் உற்பத்தியாகிறது. இதில், அரசின் ஆவின் நிறுவனம், 38.26 லட்சம் லிட்டர் கொள்முதலும், மீதமுள்ளவை தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் இருந்து தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்கின்றன. ஆவின் நிறுவனம் தினமும் 16.41 லட்சம் லிட்டர் பாலை பாக்கெட்டுகளில் விற்பனை செய்து வருகிறது.
தமிழகத்தின் பால் தேவையில் 84% அதாவது 1.25 கோடி லிட்டரை தனியார் பால் நிறுவனங்கள் பூர்த்தி செய்து வருகிறது. இதனால் தனியார் நிறுவனங்கள் தன்னிச்சையாக, தற்போது தங்களது விற்பனை விலையை உயர்த்தி உள்ளனர். இதன் காரணமாக, பால் சார்ந்த அனைத்து உணவுப் பொருட்களின் விலையும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடதக்கது.
அதன்படி சீனிவாசா பால் நிறுவனம் பால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி இருக்கிறது. ஹட்சன் நிறுவனம் பால் மற்றும் தயிர் விலையை லிட்டருக்கு ரூ.4 உயர்த்த இருக்கிறது. மற்ற நிறுவனங்களும் பால் விலையை அடுத்தடுத்த நாட்களில் உயர்த்த திட்டமிட்டிருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கத்தைச் சேர்ந்த எம்.ஜி.ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், விற்பனை விலையில் உள்ள வித்தியாசம் கொள்முதல் விலையுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் வெண்ணெய் சேமித்து வைக்க விரும்புவதால் சில இடங்களில் தனியார் பால் பண்ணைகள் ஒரு லிட்டர் பாலுக்கு ₹51 வரை வழங்குகின்றன.
இப்படி கொள்முதல் விலையில் உள்ள வேறுபாடு தொடர்ந்தால், விவசாயிகள் படிப்படியாக தனியார் பால் பண்ணைகளை நோக்கி செல்ல வேண்டியிருக்கும். இது ஆபத்தான போக்காகும். பால் விலை நிர்ணயம் முழுவதுமாக தனியாருக்குச் சென்றுவிடும். மாநிலத்தில் உள்ள கூட்டுறவு இயக்கத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும், எனக் குறிப்பிட்டார்.
தமிழக அரசு தலையிட்டு தனியார் நிறுவனங்களின் தன்னிச்சையான விலை உயர்வை உடனடியாக நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச் சங்கம் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் படிக்க:
5 ரூபாய்க்கு சிறுதானிய ஸ்நாக்ஸ்: ஸ்டார்ட்அப் நிறுவனம் அசத்தல்!
சேலம்: காய்கறிகள் விற்கும் ஆறு நடமாடும் வாகனங்கள் விரைவில் களமிறங்கும்