14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு பஸ் போக்குவரத்து ஊழியர்கள் திட்டமிட்டபடி இன்று தங்களின் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
வேலைநிறுத்தம் தொடக்கம்
கடந்த 18 மாதமாக நிறைவேற்றப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டு வரும் போக்குவரத்து கழக தொழிலாளர்களின் 14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்றக் கோரியும், தமிழக அரசை கண்டித்தும் அரசு பஸ் போக்குவரத்து ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்திருந்தது. அதன்படி போக்குவரத்து ஊழியர்கள் தங்களின் போராட்டத்தை திட்டமிட்டபடி இன்று தொடங்கியுள்ளனர். இந்தப் வேலைநிறுத்தப்போராட்டத்தில் தொ.மு.ச. சி.ஐ.டி.யூ, ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட 9 தொழிற்சங்கங்கள் பங்கேற்றுள்ளன.
வேலைநிறுத்த போராட்டம் காரணமாக தமிழகம் முழுவதும் குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர்.
50% பேருந்துகள் இயக்கம்
சென்னையில் 50 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. சென்னையில் பல்லவன் இல்லம், அம்பத்தூர் உள்ளிட்ட பணிமனைகளில் இருந்து குறைந்த அளவே உள்ளூர் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர் செல்லும் பேருந்துங்களும் குறைந்த அளவே இயக்கப்பட்டு வருகின்றன. தனியார் பேருந்துகள் இயக்கப்படுவதில் எந்த பாதிப்பும் இல்லை.
இதேபோல் விருதுநகர், கும்பகோணம், தூத்துக்குடி, மரக்காணம் உள்ளிட்ட பல பணிமனைகளிலும் மிகக்குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சேலம், கரூர், நாமக்கல் மாவட்டங்களில் வழக்கம்போல் பேருந்துகள் இயக்கப்படு வருகின்றன
போக்குவரத்து கழகம் எச்சரிக்கை
இந்நிலையில், வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்ளும் பஸ் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு போக்குவரத்து கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், போக்குவரத்து கழகம் என்பது, அத்தியாவசிய சேவைக்குரிய நிறுவனம் என்பதால் போக்குவரத்து கழகத்தின் அனைத்து பணியாளர்களும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளாமல் தவறாமல் பணிக்கு வர வேண்டும்.
ஒழுங்கு நடவடிக்கை
இன்று முதல் பணி ஓய்வு, வார ஓய்வு, மாற்றுப் பணி ஓய்வு எடுக்க அனுமதி பெற்றவர்களுக்கு ஓய்வு ரத்து செய்யப்பட்டு, பணிக்கு திரும்பும்படி அறிவிக்கப்படுகிறது. அதற்கான மாற்று ஓய்வு மற்றொரு நாளில் வழங்கப்படும். வேலை நிறுத்தப்போராட்டத்தில் கலந்துகொண்டு பணிக்கு வராதவர்கள் மீது தக்க ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
மேலும் படிக்க...
பிஎம் கிசான் திட்டம் 2 ஆண்டுகள் நிறைவு! - விவசாயிகளின் உறுதிக்கு பிரதமர் மோடி பாராட்டு!