திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் 78 கோடியே 52 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள உணவுப் பூங்காவிற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். மேலும், 2019-2020ஆம் ஆண்டிற்கான பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். பாரம்பரிய நெல் பாதுகாவலர் விருதினை மூன்று பேருக்கு வழங்கி கௌரவித்தார்.
ரூ.10 கோடியில் வேளாண் கட்டிடங்கள் திறப்பு
கிராமப்புற மக்களின் வாழ்வாதாரமாக விளங்குகின்ற வேளாண் தொழிலை மேம்படுத்திடவும், வேளாண் உற்பத்தி திறனில் உள்ள இடைவெளியை உரிய பண்ணை அணுகுமுறை மூலம் குறைத்து உணவுப் பயிர்கள் உற்பத்தியைப் பெருக்குவதற்கும், வேளாண் விளைபொருட்களின் அறுவடைக்குப் பிந்தைய பதப்படுத்தும் கட்டமைப்புகளை மேம்படுத்திடவும், சந்தையிணைப்பை வேறுபடுத்துவதன் மூலம் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கச் செய்து அவர்களின் வருமானத்தைப் பல மடங்காக உயர்த்திடவும், தமிழகத்தில் இரண்டாம் பசுமைப் புரட்சியை ஏற்படுத்திடவும் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.அந்த வகையில்,
சென்னை, நந்தனம், வேளாண்மைப் பொறியியல் துறை தலைமைப் பொறியாளர் அலுவலக வளாகத்தில் 8 கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாநில வேளாண் இயந்திரங்கள் தகவல் மையக் கட்டடம்
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில், தோட்டக்கலை வளர்ச்சிக்குத் தேவையான அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்ய ஏதுவாகவும், தோட்டக்கலை தொடர்பான தகவல்களை விவசாயிகளிடம் பகிர்ந்து அவர்கள் பயன்பெறும் வகையிலும், 3,704 சதுர அடி கட்டட பரப்பளவில், 95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், கட்டப்பட்டுள்ள மாவட்ட தோட்டக்கலை தகவல் மற்றும் பயிற்சி மையம்
சென்னை மாவட்ட மக்களுக்கு வீட்டுக் காய்கறி தோட்டம் அமைப்பதற்காக காய்கறி விதைகள், நுண்ணுயிர் உரங்கள் அடங்கிய காய்கறி தளைகள், அழகு மற்றும் தொட்டிச் செடிகள், இயற்கை உரங்கள், மதிப்பு கூட்டப்பட்ட தோட்டக்கலை பொருட்கள் போன்றவற்றை பொது மக்களுக்கு வழங்கிடும் வகையில் திருவான்மியூரில், 3,720 சதுர அடி கட்டடப் பரப்பளவில், 99 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தோட்டக்கலை கிடங்கு என மொத்தம் 10 கோடியே 62 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான வேளாண்மைத் துறை கட்டடங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்கள்.
திருநெல்வேலியில் ரூ.78 கோடியில் உணவுப் பூங்கா
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சார்பில் திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் 50 ஏக்கர் பரப்பளவில் 78 கோடியே 52 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள உணவுப் பூங்காவிற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்கள்.
இந்த உணவுப் பூங்கா தமிழ்நாடு அரசு, மத்திய அரசு மற்றும் நபார்டு வங்கி நிதி உதவியுடன் அமைக்கப்படவுள்ளது. மேலும், பொது கட்டமைப்பு வசதிகளான உணவுப் பொருள் சோதனை ஆய்வகம், 5000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதனக் கிடங்கு, 7500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புக் கிடங்கு, சிப்பம் கட்டும் மையம் போன்ற கட்டமைப்புகளும் அமைக்கப்பட உள்ளன.
நெல் பாதுகாவலர் விருது
பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாத்து பயிரிடும் விவசாயிகளை ஊக்குவித்திடும் விதமாக, பாரம்பரிய முறையில் சாகுபடி செய்து அதிக மகசூல் பெற்று மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பெறும் விவசாயிகளுக்குபாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். பாரம்பரிய நெல் பாதுகாவலர் விருது வழங்கப்படுகிறது.
மேலும், இவ்விருது பெறும் விருதாளர்களுக்கு முறையே 1 லட்சம் ரூபாய், 75 ஆயிரம் ரூபாய் மற்றும் 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.
அந்த வகையில், 2019-2020ஆம் ஆண்டிற்கான பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். பாரம்பரிய நெல் பாதுகாவலர் விருதிற்கான முதல் பரிசினை நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த திரு.என். சக்திபிரகதீஷ் அவர்களுக்கும், இரண்டாம் பரிசினை சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த திரு.எஸ். வேல்முருகன் அவர்களுக்கும், மூன்றாம் பரிசினை சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த திரு. உ. சிவராமன் அவர்களுக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கி கௌரவித்தார்கள்.
மேலும் படிக்க...
போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் தொடக்கம், பொதுமக்கள் பாதிப்பு!!
தொடரும் விவசாயிகள் போராட்டம், 40 லட்சம் டிராக்டர்களுடன் நாடாளுமன்றத்தை முற்றுகையிட விவசாயிகள் திட்டம்!!
பிஎம் கிசான் திட்டம் 2 ஆண்டுகள் நிறைவு! - விவசாயிகளின் உறுதிக்கு பிரதமர் மோடி பாராட்டு!