மேட்டூர் அணை விவகாரத்தில் மெத்தனப் போக்கோடு செயல்பட்டால், பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளை காக்கும் பொருட்டு மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படும் என தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
போதிய நீர் திறக்கப்படாததால், பல பகுதிகளிலில் நெற்பயிர் கருகியுள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இதுத் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியின் விவரம் பின்வருமாறு-
ஒவ்வொரு ஆண்டும் குறுவை பாசனத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12 முதல் செப்டம்பர் 15-ஆம் தேதிவரை சுமார் 5.25 லட்சம் ஏக்கர் பாசன நிலங்களுக்கு 125 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படும். இதற்கு மேட்டூர் அணையிலிருந்து 99.74 டி.எம்.சி. தண்ணீர் வழங்கியும், மீதமுள்ள தண்ணீரானது மழை மற்றும் நிலத்தடி நீர் மூலமாகவும் பூர்த்தி செய்யப்படும்.
எனவே, ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையில் நீர் இருப்பு மற்றும் இந்திய வானிலை மையத்தின் ஆண்டு மழைப் பொழிவு பற்றிய விபரங்களையும் பெற்று டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு குறுவை சாகுபடி தண்ணீர் திறப்பை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். ஆனால், இந்த ஆண்டு மேட்டூர் அணையில் தண்ணீர் 110 அடிக்கு மேல் உள்ளது என்ற ஒரே காரணத்திற்காக, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் விபரங்களைப் பெறாமல், திமுக அரசின் முதலமைச்சர் ஜூன் 12 அன்று மேட்டூரில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டார்.
மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்கு ஜூன் 12-ஆம் தேதி 3000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு, அன்றே மாலைக்குள் படிப்படியாக 10 ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்பட்டு, ஜூலை மாதத்தில் படிப்படியாக 16000 கனஅடியாக உயர்த்தி ஆகஸ்ட் மாதத்தில் 18000 கனஅடியாக நீர் தேவைக்கேற்ப, மழையின் அளவுக்கேற்ப வழங்கப்பட வேண்டும்.
ஆனால், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் திறக்கப்பட்ட தண்ணீணின் அளவு வெறும் 10 ஆயிரம் கன அடிதான். இதன் விளைவாக டெல்டா மாவட்டங்களில், ஆற்றங்கரை ஓரம் உள்ள பாசனப் பரப்புகள் மற்றும் சில தண்ணீர் திறந்துவிடப்பட்ட கால்வாய்களின் ஓரங்களில் உள்ள பாசனப் பரப்புகள் தவிர, மற்ற இடங்களில் குறுவை சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் கருகி விவசாயிகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் தொகுதி, தலைஞாயிறு ஒன்றியத்தில் மட்டும் குறுவை சாகுபடி செய்து, போதிய தண்ணீர் இல்லாமல் பண்ணைத் தெரு, மாராச்சேரி, ஆய்மூர், வடுகூர், திருவிடமருதூர், நீர்மூலை, சித்தாய்மூர், கச்சநகரம், பனங்காடி, பாங்கல், கொளப்பாடு, கொத்தாங்குடி, நத்தப்பள்ளம், மணக்குடி, காடந்தேத்தி, வாட்டக்குடி, உம்பளச்சேரி, துளசாபுரம் ஆகிய கிராமங்களில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் காய்ந்து கருகி காட்சியளிக்கின்றன.
டெல்டா விவசாயிகள் இந்த குறுவை சாகுபடியில் தங்களது சேமிப்பு மற்றும் உடலுழைப்பை இழந்ததுடன், கூட்டுறவு சங்க கடன்காரர்களாகவும் மாறி, முன்னெச்சரிக்கையுடன் செயல்படாத விடியா திமுக அரசின் மீது மிகுந்த கோபத்துடன் உள்ளனர்.
'ஆடிப்பட்டம் தேடி விதை' என்பது பழமொழி ஆடி மாதம் முடிவடைந்து ஆவணி மாதமே பிறந்துவிட்டது. மேட்டூர் அணையிலிருந்து சம்பா மற்றும் தாளடி பாசனத்திற்கு செப்டம்பர் 15 முதல் ஜனவரி 28 வரை சுமார் 16.50 லட்சம் ஏக்கர் பாசன நிலங்களுக்கு 320 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படும். இதற்கு அணையிலிருந்து சுமார் 263 டிஎம்.சி. தண்ணீர் வழங்கியும், மீதமுள்ள தண்ணீர் மழை மற்றும் நிலத்தடி நீர் கொண்டும் பூர்த்தி செய்யப்படும்.
மேட்டூர் அணை விவகாரத்தில் ஆளும் திமுக அரசு மெத்தனப் போக்கோடு செயல்பட்டால், அதிமுக சார்பில் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் காண்க:
ரொம்ப கவலைப் படாதீர்கள்- வெங்காய விவசாயிகளுக்கு வேளாண் அமைச்சர் பதில்