ஓசூர் (Hosur) பகுதிகளில் ரோஜா மலர்களை (Roja Flowers), குளிர்கால நோய்கள் தாக்கியதில், உற்பத்தி குறைந்து வருவதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
உலக நாடுகளுக்கு ஏற்றுமதி:
ஓசூர் பகுதியில் பசுமைக்குடில்கள் மற்றும் திறந்தவெளி மூலம், சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ரோஜா மலர் சாகுபடி (Roja Flower cultivation) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு தாஜ்மஹால், நொப்ளஸ், பர்ஸ்ட்ரெட், கிரான்ட்காலா, பிங்க், அவலான்ஜ் உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட வகைகளில் ரோஜாமலர்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தியாகும் ரோஜாமலர்கள் கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் காதலர் தினம் (Lovers Day) உள்ளிட்ட விழாக்களுக்காக மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, வளைகுடா நாடுகள் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி (Export) செய்யப்பட்டு வருகிறது.
குளிர்கால நோய்கள்:
காதலர் தினத்திற்கு மட்டும் ஆண்டுதோறும் ஒரு கோடிக்கு மேல் ரோஜா மலர்கள் ஏற்றுமதி செய்யப்படும். ஓசூர் பகுதிகளில் தற்போது சீதோஷ்ண நிலை (Climate) மாறி, கடும் குளிர் நிலவி வருவதால், ரோஜா மலர்களை குளிர்கால நோய்கள் (Disease) தாக்கி வருகின்றனர். குளிர்காலத்தில் ஏற்படும் முக்கிய நோயான டௌனி நோய், ரோஜா மலர்களை தாக்கி வருவதால் செடிகளில் அதன் இலைகள் கருகி விழுகின்றன. தொடர்ந்து பூக்களும் கருகி தரத்தை இழக்கின்றன.
விவசாயிகள் கோரிக்கை:
ரோஜா மலர்களில், குளிர் கால நோயை கட்டுப்படுத்த, பல்வேறு ரசாயன மருந்துகளை தெளித்தாலும் நோயை கட்டுப்படுத்த முடியாததால், மலர் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். டெளனி நோயை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
Read More
தமிழகம் விருதுநகர் பகுதியில், கோழிக்கொண்டை பூ விவசாயத்தில் விவசாயிகள் ஆர்வம்