தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி இ.ஆ.ப., நேற்று அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், தடங்கம் ஊராட்சி எல்லைக்குட்பட்ட சிப்காட் அமையவிருக்கும் 100 அடி சாலையில் தருமபுரி சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி இஆப., நேற்று (10.03.2023) அடிக்கல் நாட்டி, பணிகளை துவக்கி வைத்தார்.
அரசாணை (நிலை) எண்:284 தொழிற் (சிப்காட்-நி.எ) துறை நாள்:30.12.2015-ன் படி தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி வட்டம் அதகப்பாடி, நல்லம்பள்ளி வட்டம் தடங்கம், அதியமான்கோட்டை மற்றும் பாலஜங்கமனஅள்ளி ஆகிய கிராமங்களில் நில எடுப்பு செய்து சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்பட நிர்வாக அனுமதி வழங்கி ஆணையிடப்பட்டுள்ளது.
முதல் கட்ட நில எடுப்பு பணிகள் முடிக்கப்பட்டு மொத்தபரப்பு 1733.63 ஏக்கரில் இதுவரை சிப்காட் நிறுவனத்திடம் 478.38 ஏக்கர் பட்டா நிலமும், 984.34 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலமும் என மொத்தம் 1462.72 ஏக்கர் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுவரை நில உரிமையாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ. 77.63 கோடி வழங்கப்பட்டுள்ளது. நிலம் ஒப்படைக்கப்பட்ட பகுதியில் தொழிற்சாலைகள் அமைக்க நில ஒதுக்கீடு செய்யும் நடவடிக்கைகள் சிப்காட் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சிப்காட் தொழிற்பூங்கா வளாகத்திற்கு தேசிய நெடுஞ்சாலை-44 லிருந்து 1.35 கி.மீ. தூரமுள்ள சாலை மற்றும் இதர கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த ரூ.14.08 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ளன. சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க சுற்றுசூழல் அனுமதி பெற ITCOT நிறுவனத்தின் மூலம் முன்மொழிவுகள் தயாரிக்கப்பட்டு அனுமதி பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தருமபுரி சிப்காட் தொழிற்பூங்காவில் தொழிற்சாலைகளை அமைக்க பல முன்னணி நிறுவனங்கள் பார்வையிட்டு தேவையான நிலங்களை ஒதுக்க சிப்காட் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
அரசாணை எண். 8, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை. நாள்: 23.01.2023-ன் படி தருமபுரி சிப்காட் தொழிற்பூங்காவில் OLA Electric Mobility Pvt. Ltd. நிறுவனம் தொழிற்சாலை அமைக்க 700 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்ய ஆணையிடப்பட்டு நிலம் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இக்கூட்டத்தில் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் கே.பி.அன்பழகன் (பாலக்கோடு), ஜி.கே.மணி (பென்னாகரம்), எஸ்.பி.வெங்கடேஷ்வரன் (தருமபுரி), ஆ.கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி), வி.சம்பத்குமார் (அரூர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவர்களைத் தவிர்த்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் பெ.சுப்பிரமணி, தருமபுரி நகரமன்ற தலைவர் லட்சுமி, மா.திட்ட அலுவலர் (சிப்காட்) பன்னீர் செல்வம், நல்லம்பள்ளி ஒன்றியக்குழுத் தலைவர் பெ.மகேஸ்வரி, நல்லம்பள்ளி ஒன்றியக்குழு உறுப்பினர் முருகன், தடங்கம் ஊராட்சி மன்றத் தலைவர் மு.கவிதா, கூட்டுறவு சங்கத் தலைவர்கள் பெரியண்ணன், சிவப்பிரகாசம், வட்டாட்சியர்கள் வெங்கடேஷ்வரன் (சிப்காட்), ஆறுமுகம் (நல்லம்பள்ளி) உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
மேலும் காண்க :
டிஜிட்டல் இந்தியா மசோதா 2023-ன் சிறப்பம்சங்கள் என்ன? ஒன்றிய இணை அமைச்சர் விளக்கம்
வேகமெடுக்கும் இன்புளூயன்சா காய்ச்சல்- தமிழகம் முழுவதும் 1000 சிறப்பு மருத்துவ முகாம்