ரஷ்யாவின் தாக்குதலுக்கு ஆளாகி சின்னாப்பின்னமான உக்ரைனில் இருந்து திரும்பும் தமிழக மாணவர்களின் பயணச் செலவை அரசே ஏற்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இருக்கும் நேட்டோ படையில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்நாட்டின் மீது ரஷ்யா அதிரடித் தாக்குதலைத் தொடங்கியது.உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல் 2-வது நாளாகத் தொடர்கிறது.
இந்நிலையில் உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள், பொது மக்களை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். அதில், அங்கு தொழில்முறை படிப்புகள் பயிலும் தமிழகத்தை சேர்ந்த சுமார் 5 ஆயிரம் மாணவர்கள் மற்றும் மாநிலத்தில் இருந்து அங்கு குடியேறியவர்கள் உக்ரைனில் சிக்கி தவித்து வருகின்றனர்.
அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வர வேண்டும்' எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
உக்ரைனில் படிக்கும் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் 916 பேர் தமிழக அரசை தொடர்பு கொண்டுள்ளனர். தமிழக மாணவர்கள், அங்கு பணியாற்றும் தமிழர்கள் பத்திரமாக மீட்கப்படுவார்கள்.
உக்ரைனில் மாணவர்கள், பணி நிமித்தமாக உள்ளவர்கள் என 5 ஆயிரம் தமிழர்கள் உள்ளனர். இந்த 5 ஆயிரம் பேரை மீட்டு வர தொடர்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். உக்ரைனில் உள்ள மாணவர்கள் தமிழகம் திரும்புவதற்கான செலவைத் தமிழக அரசே ஏற்கும். இவ்வாறு முதல்வர் அறிவித்துள்ளார்.
மேலும் படிக்க...