திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான மனோபாலா உடல்நலக் குறைவால் மறைவுற்றார். அதனைத்தொடர்ந்து திரையுலக நட்சத்திரங்கள், அரசியல் பிரமுகர்கள், சினிமா ரசிகர்கள் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மறைந்த இயக்குநரும், நடிகருமான மனோபாலா இயற்கை விவசாயத்தில் பெரும் ஆர்வம் கொண்டவர். சென்னையில் உள்ள தன் அலுவலகத்தில் சிறந்த முறையில் மாடித்தோட்டம் அமைத்து பராமரித்து வந்தார்.
தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நடித்தும், தனது யூ-டியூப் பக்கத்தில் திரையுலக பிரபலங்களை நேர்க்காணலும் செய்து வந்த மனோபாலா, தான் பிஸியாக இருந்த வேளையிலும் தனது மாடித்தோட்டத்தில் உள்ள செடிகளை பராமரிப்பதை அவர் ஒருபோதும் மறந்ததில்லை.
தோட்டம் வளர்ப்பது என்பது ஒரு கலை என அவர் எப்போதும் குறிப்பிடுவார். மனோபாலாவின் பெற்றோர்கள் விவசாயத் தொழிலில் தீவிரமாக ஈடுபட்டவர்கள். அவர்களிடமிருந்து தான் எனக்கும் தோட்டக்கலை வளர்ப்பின் மீது ஆர்வம் அதிகரித்தது என தனது பேட்டி ஒன்றில் மனோபாலா தெரிவித்துள்ளார். வெண்டைக்காய் ஆரம்பக்காலக் கட்டத்தில் காடுகளில் மரமாக தான் வளர்ந்து வந்துள்ளது. காலப்போக்கில் நாம் விதை மரபணு மாற்றம் செய்து செடிகளில் வளரும் வகையில் வெண்டைக்காயினை வளர்க்கத் தொடங்கிவிட்டோம், என தனது மாடித்தோட்டத்தில் வளர்த்து வந்த வெண்டைக்காய் மரத்தினை பற்றி பேசும் போது குறிப்பிடுகிறார்.
மானோபாலாவின் மாடித்தோட்டத்தில் வளர்க்கப்பட்டவை:
தனது மாடித்தோட்டத்தில் தக்காளி, கீரை, கத்தரிக்காய், சோளம், கற்பூரவல்லி, கறிவேப்பிலை, மணத்தக்காளி, முள்ளங்கி, தூதுவளை, காரமணி, வெண்டைக்காய், புடலங்காய், கொத்தவரை, செடி முருங்கை, மிளகாய், வெள்ளரிக்காய், அவரைக்காய், சிகப்பு வெண்டைக்காய், வெங்காயம், பாகற்காய், தர்பூசணி என வளர்த்து பராமரித்து வந்தார்.
இயற்கையான முறையில் காய்கறிகளை விளைவித்து, அதனை உண்பதில் கிடைக்கும் இன்பம் அதை உணர்ந்தால் தான் புரியும் எனவும் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். கொரோனா காலத்தில் தனது அலுவலகத்தில் உள்ள தோட்டங்களை சரியாக பராமரிக்க முயலாததால் பெரிதும் மன உளைச்சலுக்கு உள்ளானேன் என குறிப்பிட்ட மனோபாலா, கொரோனாவிற்கு பின் தனது மாடித்தோட்டத்தை மீள் உருவாக்கம் செய்து நன்றாக பராமரித்தும் வந்துள்ளார்.
இதுப்போக தனது யூ-டியூப் பக்கத்தில் மாடி வீட்டுத்தோட்டத்தில் ஈடுபடும் நபர்களை பேட்டி எடுத்தும் பதிவிட்டு வந்துள்ளார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது.
மறைந்த இயக்குனர் மனோபாலாவிற்கு வயது 69. கல்லீரல் பாதிப்புக்காக அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநர்களுள் ஒருவரான பாரதிராஜாவின் உதவி இயக்குநராக திரையுலகிற்குள் காலடி எடுத்துவைத்த மனோபாலா 1982-ஆம் ஆண்டு ஆகாய கங்கை படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
pic courtesy: manobala kitchen youtube
மேலும் காண்க:
மனோபாலாவின் பாராட்டு இன்னும் நெஞ்சில் நிழலாடுகிறது- முதல்வர் இரங்கல்