தமிழகம் முழுவதும் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது.
கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும் தற்போது 30.6.2020 முடிவடைய உள்ள ஊரடங்கு உத்தரவு, 31.7.2020 நள்ளிரவு 12 மணி வரை தமிழ்நாடு முழுவதும் மேலும் நீட்டிப்பு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தற்போது முழு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மதுரை மாவட்டங்களில் நோய் தொற்று அதிகம் இருக்கும் பகுதிகளில் நடைமுறையில் இருக்கும் முழு ஊரடங்கு உத்தரவு வருகிற 5.7.2020 வரை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், கடந்த 19ம் தேதிக்கு முன் சென்னை மற்றும் அதை ஒட்டியுள்ள மாவட்டங்களில் உள்ள பகுதிகளில் இருந்த ஊரடங்கின் நிலையே 6.7.2020 அதிகாலை 00 மணி முதல் 31.7.2020 நள்ளிரவு 12.00 மணிவரை தொடரும். அதேபோல் மதுரை மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் 24.6.2020க்கு முன்னர் இப்பகுதிகளில் இருந்த ஊரடங்கின் நிலையே 6.7.2020 அதிகாலை 00 மணி முதல் 31.7.2020 நள்ளிரவு 12.00 மணிவரை தொடரும் என்று கூறப்பட்டுள்ளது
ஞாயிறுகளில் முழு ஊரடங்கு
மேலும் 5.7.2020, 12.7.2020, 19.7.2020 மற்றும் 26.7.2020 ஞாயிற்றுக் கிழமைகளில் எந்தவிதமான தளர்வுகளும் இன்றி தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது பேருந்து போக்குவரத்துக்கு தடை
மாநிலத்தில் மாவட்டங்களுக்குள் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மற்றும் அரசு பொது பேருந்து போக்குவரத்து 1.7.2020 முதல் 15.7.2020 வரை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.
இ-பாஸ் முறை :
அந்தந்த மாவட்டத்திற்குள் இ-பாஸ் இல்லாமல் செல்ல அனுமதி அளிக்கப்படும்
முழு ஊரடங்கு நீட்டிக்கப்படும் இடங்களில் 30.6.2020 வரை வழங்கப்பட்ட இ-பாஸ் 5.7.2020 வரை செல்லும். இதற்கு மீண்டும் புதிய இ-பாஸ் பெறத் தேவை இல்லை.
வெளி மாநிலங்களுக்கு சென்று வரவும், வெளி மாநிலங்களிலிருந்து.தமிழ்நாட்டுக்குள் வரவும், மாவட்டங்களுக்கிடையே சென்று வரவும், இ-பாஸ் முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.
ஒரு மாவட்டத்திலிருந்து வேறொரு மாவட்டத்திற்கு அரசுப் பணிகளுக்கான ஒப்பந்தங்களில் பங்கேற்க விரும்பும் ஒப்பந்ததாரர்களுக்கும், அப்பணியை மேற்பார்வை செய்யும் ஒப்பந்ததாரர்களுக்கும் மற்றும் இப்பணிகள் சம்பந்தமாக அரசு அதிகாரிகளை சந்திக்க விரும்பும் ஒப்பந்ததாரர்களுக்கும் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவர்களால் இ-பாஸ் வழங்கப்படும்.
பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் மற்றும் முழு ஊரடங்கு அமலில் உள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பகுதிகளிலும், நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் கீழ்கண்ட பணிகளுக்கு மட்டும் 6.7.2020 முதல் அனுமதி
-
தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள் அதிகபட்சம் 80 நபர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.
-
அனைத்து தனியார் நிறுவனங்களும், தொழில் நிறுவனங்களும் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களும் 50 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்பட அனுமதி
-
வணிக வளாகங்கள் தவிர்த்து, அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் (நகை, ஜவுளி போன்றவை) 50 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்படலாம். ஒரே நேரத்தில் அதிகபட்சம் 5 வாடிக்கையாளர்கள் மட்டும் கடைக்குள் வர அனுமதி
-
உணவகங்களில் அமர்ந்து உணவு அருந்த அனுமதி அளிக்கப்படுவதோடு, மொத்த இருக்கைகளில், 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படுகிறது. எனினும், உணவகங்களில் குளிர் சாதன வசதி இருப்பினும் அவை இயக்கப்படக் கூடாது.
-
தேநீர் கடைகள், உணவு விடுதிகள் மற்றும் காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படுகிறது.
-
வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களை, ஓட்டுநர் தவிர்த்து, மூன்று பயணிகளை மட்டுமே கொண்டு, பயன்படுத்தலாம். ஆட்டோக்களில், ஓட்டுநர் தவிர்த்து, இரண்டு பயணிகள் மட்டுமே பயணிக்கலாம்.
-
முடிதிருத்தும் மற்றும் அழகு நிலையங்கள் குளிர் சாதன வசதியைப் பயன்படுத்தாமல், அரசு தனியாக வழங்கிய நிலையான செயல்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இயங்க அனுமதிக்கப்படுகிறது.
-
மீன் கடைகள், கோழி இறைச்சி கடைகள், மற்ற இறைச்சி கடைகள் மற்றும் முட்டை விற்பனை கடைகள், சமூக இடைவெளி நடைமுறைகளுக்கு உட்பட்டு அனுமதிக்கப்படுகிறது.
பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதி தவிர, முழு ஊரடங்கு அமலில் உள்ள மாவட்டங்களில் 6.7.2020 முதல் கீழ்கண்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி
-
சிறிய திருக்கோயில்கள் வழிப்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
-
தொழில் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் 100 விழுக்காடு பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.
-
தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள் 100 விழுக்காடு பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. எனினும், 20 விழுக்காடு பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதை ஊக்குவிக்க வேண்டும்.
-
அனைத்து தனியார் நிறுவனங்களும் 100 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. எனினும், இயன்ற வரை பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதை தனியார் நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும்.
-
வணிக வளாகங்கள் தவிர்த்து, அனைத்து ஷோரூம்கள் மற்றும்,பெரிய கடைகள் (நகை, ஜவுளி போன்றவை) 50 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்படலாம். இருப்பினும் அதிகபட்சம் 5 வாடிக்கையாளர்கள் மட்டும் கடைக்குள் இருப்பதை உருதிப்படுத்த வேண்டும்.
-
தேநீர் கடைகள், உணவு விடுதிகள் மற்றும் காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படுகிறது. டாஸ்மாக் உள்ளிட்ட இதர கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கலாம்.
-
உணவகங்களில் அமர்ந்து உணவு அருந்த அனுமதி அளிக்கப்படுகிறது, 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படுகிறது.
-
தேநீர் கடைகளில் உள்ள மொத்த இருக்கையில் 50 விழுக்காடு அளவு மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்பதற்கு அனுமதிக்கப்படுகிறது.
-
வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்கள் ஓட்டுநர் தவிர்த்து மூன்று பயணிகளுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. ஆட்டோக்கள் இரண்டு பயணிகளுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.
-
மீன் கடைகள், கோழி இறைச்சி கடைகள், மற்ற இறைச்சி கடைகள் மற்றும் முட்டை விற்பனை கடைகள் சமூக இடைவெளி நடைமுறைகளுக்கு உட்பட்டு அனுமதிக்கப்படுகிறது.
-
பொது குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144ன் கீழ் பொது இடங்களில் ஐந்து நபர்களுக்கு மேல் கூடக் கூடாது என்ற நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கும்.
-
தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின் படி, எந்தவிதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.
-
அனைத்து, தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்களது ஊழியர்கள் / பணியாளர்களை வீட்டிலிருந்தபடி பணிபுரிய ஊக்குவிப்பதோடு, தொழில் மற்றும் வணிக நிறுவனங்களில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
பயிர்களில் பூச்சி தாக்குதலா? ஆர்கானிக் உரங்களை பயன்படுத்தி நல்ல பலன் பெறலாம்!
ஆவண உத்தரவாதம் இன்றி ரூ.50,000 வரை வங்கிகடன் - மத்திய அரசின் புதிய சலுகை!
மத்திய அரசால் உங்கள் வங்கி கணக்கிற்கு வரும் மானியங்களை தெரிந்துகொள்ள எளிய முறை அறிமுகம்!