மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்ததால், காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீர் திங்கள்கிழமை இரவு 10,000 கனஅடியாக குறைக்கப்பட்டது.
செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, அணைக்கு நீர்வரத்து 163 கன அடியாகவும், அணையின் மொத்த கொள்ளளவான 120 அடியில் 86.77 அடியாகவும் நீர் இருப்பு இருந்தது. நீர்வரத்து குறைந்தது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், கர்நாடகாவிடம் இருந்து தமிழகத்திற்கு போதிய தண்ணீர் கிடைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாசனத்திற்காக ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின். ஜூன் 30-ம் தேதியன்று மொத்தம் 13,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால், நீர்வரத்து தொடர்ந்து குறைந்ததால், திங்கள்கிழமை இரவு 10,000 கனஅடியாகக் குறைக்கப்பட்டது.
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் முன்னணி நாளிதழ் ஒன்றிடம் கூறுகையில், "ஜூன் 12-ல் தண்ணீர் திறக்கப்பட்டது, ஆனால் இதுவரை விவசாயிகள் சாகுபடியை முடிக்கவில்லை, இன்னும் வால்முனை பகுதிகளுக்கு தண்ணீர் வரவில்லை.” என குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், “அணையில் இருந்து தண்ணீர் திறப்பதை குறுகிய காலத்தில் அதிகாரிகள் குறைத்துள்ளனர். அணையில் இருந்து 10,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டால், திருச்சியில் உள்ள கல்லணைக்கு 4,000 கனஅடி மட்டுமே வருகிறது. இதை அதிகாரிகள் புரிந்து கொண்டு, விவசாயிகளின் நலன் கருதி மேட்டூரில் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்துவிட வேண்டும். சில நாட்களுக்கு குறைந்தபட்சம் 15,000 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும்,'' என குறிப்பிட்டுள்ளார்.
நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், ''தற்போது குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டு, செப்டம்பர் 15 ஆம் தேதி வரை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு மட்டும் 99.74 டிஎம்சி தண்ணீர் திறக்கப்படுகிறது. படிப்படியாக 18,000 கன அடி தண்ணீர் திறக்க திட்டமிட்டுள்ளோம். ஆனால் செவ்வாய்க்கிழமை மாலை வரை அணைக்கு நீர்வரத்து குறைவாகவே இருந்தது. அணையில் நீர் இருப்பும் குறைந்து வருகிறது. இதனால் திறக்கப்படும் நீர் 10,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்தால், கூடுதல் தண்ணீர் திறக்கப்படும்” எனவும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக நீர்வரத்து குறைவாக வருவதற்கான காரணத்தை மேற்கோள் காட்டி தமிழக எதிர்கட்சிகள் அரசினை விமர்சித்தனர். இதற்கு பதில் அறிக்கை வெளியிட்ட நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்த விவரம் பின்வருமாறு-
தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய நீரினை அளிக்குமாறு கர்நாடகாவிற்கு உத்தரவிடுமாறு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் அவர்களை தமிழ்நாடு உறுப்பினர் மற்றும் அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர், நீர்வளத்துறை, 16.6.2023 அன்று நடந்த 21-ஆம் கூட்டத்தில் வலியுறுத்தினார். கர்நாடகாவிலிருந்து ஜூன் மாதத்தில் குறைவாக வழங்கப்பட்ட நீர் குறித்தும், ஜூன் 30 அன்று நடைப்பெற்ற காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் கவனத்திற்கு எடுத்துரைக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர், நீர்வளத்துறை, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் அவர்களுக்கு ஜூலை 3 அன்று எழுதிய கடிதத்தில், குறைபாட்டை நிவர்த்திக்கவும், ஜூலை மாதத்தில் அட்டவணைப்படி கர்நாடகா நீர் அளிக்க அறிவுறுத்தவும் கேட்டுக் கொண்டுள்ளார்கள்” என தனது அறிக்கையின் வாயிலாக பதில் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண்க:
தக்காளி விவசாயிகள் அதிக மகசூலுக்கு இதை கண்டிப்பா செய்யுங்க !