தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கு, ஒரு அருமையான வாய்ப்பை அளித்துள்ளார், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி (Sandeep Nanduri). விவசாயிகள், காய்கனி விதைத் திட்டத்தில் (Vegetable Seed Project) சேர்ந்து, பயன்பெறலாம் என்று அவர் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தால், விதைகள் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டும். மேலும், இத்திட்டத்தில் இணையும் விவசாயிகளுக்கு மானியம் (Subsidy) வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆட்சியர் வெளியிட்டத் தகவல்:
காய்கனி விதை உற்பத்தி செய்யும் விவசாயிகள் மற்றும் தோட்டக்கலை தொழில் முனைவோர்கள் மூலம், 40 ஹெக்டேர் பரப்பளவில் ஏறத்தாழ 12 மெட்ரிக் டன் சான்றளிக்கப்பட்ட உண்மை நிலை காய்கனி விதைகளை, உற்பத்தி செய்ய இலக்கு (Target) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட விதை விவசாயிகள் மற்றும் தோட்டக்கலை தொழில் முனைவோர்களுக்கு, வெங்காயம், முருங்கை, காராமணி, கொத்தவரை, அவரை, பாகல், புடல், பீர்க்கு, பூசணி மற்றும் கீரை முதலிய காய்கனி பயிர்களின் சான்றளிக்கப்பட்ட மற்றும் உண்மை நிலை காய்கனி விதைகளை, உற்பத்தி செய்வதற்கு உதவியாக விதைச் சான்றிதழ் (Seed certificate) பெறுவதற்கு அரசு சார்பில் மானியம் வழங்கப்படும். மேலும், விதை கொள்முதல் செய்வதற்கும், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை (Integrated Nutrition Management) மற்றும் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மையை (Integrated pest management) மேற்கொள்ளவும், நிழல் வலைக் குடில், சிப்பம் கட்டும் அறை (Packing room) மற்றும் நுண்ணீர்ப் பாசனம் (Micro Irrigation) அமைப்பதற்கும் அரசு சார்பில் மானியம் வழங்கப்படும் என தூத்துக்குடி ஆட்சியர் தெரிவித்தார்.
காய்கனி விதைத் திட்டத்தில் இணையும் முறை:
தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள், இத்திட்டம் குறித்து மேலும் அறிந்து கொள்வதற்கும், காய்கனி விதைத் திட்டத்தில் இணைந்து பயன் பெறுவதற்கும், மாவட்டத் தோட்டக்கலைத் துணை இயக்குநர் அலுவலகத்தையோ அந்தந்த வட்டாரங்களில் உள்ள தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர்களையோ (Assistant Director, Department of Horticulture) தொடர்பு கொள்ளலாம். மேலும், விவசாயிகளுக்காக உருவாக்கப்பட்ட உழவன் செயலியிலும் (Uzhavan App) பதிவு செய்து, பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள், தோட்டக்கலைப் பயர்களின் காய்கனி விதை உற்பத்தி திட்டத்தில் இணைந்து, வருங்காலத்திற்கான விதைகளை சேமித்து பயனடையுமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க...
பயிர்களைப் பாதுகாக்க விதை நேர்த்தி முறையை, கையாள்வது எப்படி?
மாடுகளின் கண்களைத் தாக்கும், கண்புழு நோய்! முன்னெச்சரிக்கையும், தீர்வும்!