கொரோனா நெருக்கடி காரணமாக இந்த மாதமும் ரோஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும் இதற்கான டோக்கன் வினியோகம் 6ம் தேதி முதல் அவர் அவர் வீடுகளுக்கே சென்று வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது
ரூ.3,280 கோடி சிறப்பு நிவாரண திட்டம் (3,280 crore special relief scheme)
கொரோனா வைரஸ் நோய் தொற்றினைத் தடுக்க பல்வேறு தீவிர நோய்த் தடுப்பு பணிகளையும், நிவாரணப் பணிகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டில் 24.3.2020 முதல் மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்படி, அவ்வப்போது நிலவும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப பல தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.
இதனால், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்குடன் ரூ.3,280 கோடி மதிப்பீட்டில் சிறப்பு நிவாரண திட்டத்தை அரசு அறிவித்தது. அதன்படி, ஏப்ரல் மாதத்திலேயே அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1,000 ரூபாய் ரொக்க உதவித் தொகையுடன் விலையில்லா அரிசி, சர்க்கரை, பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவை வழங்கப்பட்டன.
இது தவிர, ஊரடங்கு தொடர்ந்த காரணத்தினால், மே மற்றும் ஜுன் மாதத்திலும் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் ஒரு கிலோ பருப்பு மற்றும் ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் ஆகியவையும், குடும்ப அட்டைதாரர்களுக்கு தகுதியான அளவு அரிசியும், சர்க்கரையும் ஏப்ரல் மாதத்தில் வழங்கியதைப் போன்றே விலையில்லாமல் வழங்க உத்தரவிடப்பட்டது.
ஜூலை மாதமும் ரேஷன் இலவசம் (Free ration extended for July)
இந்நிலையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், நபர் ஒருவருக்கு கூடுதலாக 5 கிலோ வீதம், ஏப்ரல் முதல் ஜூன் முடிய மூன்று மாதங்களுக்கு விலையில்லாமல் அரிசி வழங்க மத்திய அரசால் உத்தரவிடப்பட்டது. அதன்படி, குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையினை பொறுத்து, கூடுதலான அரிசியும், இந்த 3 மாதங்களுக்கு வழங்கப்பட்டது.
தற்போது ஜூலை 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜூலை மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும், அதாவது ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வழங்கிய அரிசி அளவின் படி, கூடுதல் அரிசியுடன் நியாய விலைக் கடைகளில், விலையின்றி வழங்க தற்போது அரசு உத்தரவிட்டுள்ளது.
6ம் தேதி முதல் டோக்கன் வினியோகம் (Tokens will be distributed from 6th July)
இவ்வாறு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அரிசி, சர்க்கரை, பருப்பு மற்றம் சமையல் எண்ணெய் ஆகியவற்றை ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்களாக தொடர்ந்து வழங்கி, அதனை ஜூலை மாதமும் வழங்கி மக்களின் உணவு பாதுகாப்பை உறுதி செய்தது, இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும் தான்.
நோய்த் தொற்று ஏற்படாத வண்ணம் மேற்படி அத்தியாவசியப் பொருட்கள் பாதுகாப்பாக அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன், வருகின்ற 6.7.2020 முதல் 9.7.2020 வரை, குடும்ப அட்டைதாரர்களுக்கு அவரவர் வீடுகளிலேயே டோக்கன் வழங்கப்படும். அந்த டோக்கன்களில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும் நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர்கள், டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் தத்தமது நியாய விலை கடைகளுக்குச் 10.7.2020 முதல் சென்று அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.
தடைசெய்யபட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அவரவர் வீடுகளுக்கே சென்று அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படும்.
பொது மக்கள் முகக் கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும், தங்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களை விலையில்லாமல் பெற்றுக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
குறைந்த முதலீடு நிறைவான வருமானம் தரும் ''காளான் வளர்ப்பு''!
நீரழிவு நோய்க்கான சில முக்கிய அறிகுறிகள்- கவனிக்கத் தவறாதீர்கள்!