1. தோட்டக்கலை

குறைந்த முதலீடு நிறைவான வருமானம் தரும் ''காளான் வளர்ப்பு''!

Daisy Rose Mary
Daisy Rose Mary
Credit By : Minnambalam

காளான்கள்... என்றதும் நம் நினைவிற்கு வருவது என்னவோ நேற்று பெய்த மழையில் இன்று கதவோரம் முளைத்திருக்கும் சின்னஞ்சிறு நாய்க்குடைகள் தான். பார்க்க மிக அழகாக இருக்கும். ஓரிரு நாட்களில் வளர்ந்து பட்டுப்போய்விடும். இவ்வாறு, நூற்றுக்ககணக்கான வகை காளான்கள் இந்த உலகில் இருக்கிறது. இருப்பினும் 'பட்டன் காளான்’, 'சிப்பிக்காளான்’, 'பால் காளான்’னு மூணு வகைகளைத்தான் நாம் உணவாக உட்கொள்கிறோம். பட்டன் காளான்கள் பொதுவாக மலைப்பிரதேசங்களில் மட்டும் தான் விளையும்.

சிப்பிக்காளான் மற்றும் பால் காளான் இரண்டையும் சாதாரணமாக எல்லா இடங்களிலும் விளைவிக்கலாம். வெயில் காலங்களில் சிப்பிக்காளான் விளைச்சல் சற்று குறைவாகவும், குளிர் காலங்களில் பால் காளான் விளைச்சல் சற்று குறைவாகவும் இருக்கும்.
வருடம் முழுவதும் காளான் வளர்க்கலாம். காளான் வளர்ப்பை வீட்டிலேயே செய்யலாம் அல்லது காளான் குடில் அமைத்து செய்யலாம்.

காளான் ரகங்கள்

  • வெள்ளைச்சிப்பி (கோ-1),

  • சாம்பல்சிப்பி (எம்.டி. யு-2),

  • ஏ.பி.கே. -1 (சிப்பி)

ஆகிய காளான் ரகங்கள் தமிழ்நாட்டிற்கு ஏற்றவை.

காளான் குடில்

16 சதுர மீட்டர் பரப்பு கொண்ட கூரை வேயப்பட்ட குடில் போதுமானதாகும்.
குடிலை வித்துப் பரவும் அறையாகவும், காளான் வளர்ப்பு அறையாகவும் பிரிக்க வேண்டும்.

வித்து பரவும் அறை: 25-30சி வெப்பநிலை, நல்ல காற்றோட்டம், இருட்டு இல்லாமல் இருக்க வேண்டும்.

வளர்ப்பு அறை : 23-25சி வெப்பம், 75-80% ஈரப்பதம், மிதமான வெளிச்சம், நல்ல காற்றோட்டம் தேவை.

காளான் வித்து

ஏற்ற தானியங்கள் : சோளம் / மக்காச்சோளம் / கோதுமை

வித்து தயார் செய்தல்: தானியங்களை அரை வேக்காடு வேகவைத்து, காற்றில் உலர்த்தி, 2% சுண்ணாம்புடன் கலந்து, காலியான குளுக்கோஸ் பாட்டில்களில் இடவேண்டும். பின்பு தண்ணீர் உறிஞ்சாப் பஞ்சினால் அடைத்து நுண்கிருமிகளை அழிக்க குக்கரில் அடுக்கி 2 மணிநேரம் வேகவைக்க வேண்டும்.

வேளாண் பல்கலைக் கழகமோ, வேளாண் துறையோ உற்பத்தி செய்த தூய்மையான தாய் காளான் வித்தை தானியம் நிரப்பப்பட்ட குளுக்கோஸ் பாட்டிலில் கலந்து, சாதாரண வெப்ப நிலையில் 15 நாட்கள் தனியாக வைக்க வேண்டும். பிறகு 15-18 நாட்கள் வயதுடைய காளான் வித்தை காளான் தயாரிப்புக்கு பயன்படுத்த வேண்டும்.

காளான் படுக்கை அமைத்தல்

ஏற்ற பொருட்கள்: வைக்கோல்/ கரும்புச்சக்கை, உமி நீக்கிய மக்காச்சோளக்கருது.
மூலப்பொருள் தயாரித்தல் : முழு வைக்கோலை 5 செ.மீ நீளமுள்ள சிறு துண்டுகளாக வெட்டி, 5 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து 1 மணி நேரம் வேக வைத்து, தண்ணீரை வடிகட்டி, 65% ஈரப்பதம் வரை காற்றில் உலர்த்திய வைக்கோலை பயன்படுத்த வேண்டும். (கைகளால் வைக்கோலைப் பிழிந்தால் தண்ணீர் சொட்டா கூடாது)

காளான் பைகள் / படுக்கைகள் தயார் செய்தல்

  • காளான் படுக்கைகள் தயார் செய்ய 60 X 30 செ.மீ பாலீத்தின் பைகளை உபயோகிக்க வேண்டும் (உபயோகபபடுத்தும் பைகள் இரு பக்கமும் திறந்திருக்க வேண்டும்).

  • பாலித்தீன் பையை ஒரு பக்கத்தில் கட்ட வேண்டும். 1 செ.மீ அளவிற்கு நடுவில் 2 ஓட்டை போடவும்.

  • வைக்கோலை ஒரு பக்கம் கட்டப்பட்ட வட்ட வடிவப் பைக்குள் 5 செ.மீ உயரத்திற்கு நன்கு அழுத்தவும். பின்பு 25 கிராம் காளான் வித்தை தூவ வேண்டும்.

  • இதே போல் 25 செ.மீ வைக்கோல் தளத்தை அமைக்கவும். காளான் வித்து தளத்தையும் வைக்கோல் தளத்தையும் 4 அல்லது 5 அடுக்குள் மாறி மாறி நிரப்ப வேண்டும். வாயிலை நன்றாகக் கட்டி, குடிலினுள் உள்ள பரண் போன்ற இருப்பில் வைக்க வேண்டும்.

  • விதைத்த 15-20 நாட்களில் காளான் படுக்கை முழுவதும் வெண்மையான காளான் இழைகள் படர்ந்திருக்கும். பின்னர் சுத்தமான கத்தியைக் கொண்டு பாலித்தீன் பையைக் கிழிக்க வேண்டும்.

  • காளான் படுக்கை காயாமல் இருக்க தினமும் தண்ணீரைக் கைதெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.

காளான் அறுவடை

  • பைகளை கிழித்த 3ஆம் நாளில் காளானின் மொட்டுகள் சிறு திறள் போன்று காணப்படும். பின்னர் 3 நாட்களில் முழுவளர்ச்சி அடையும்.

  • தண்ணீர் தெளிக்கும் முன் காளான் அறுவடை செய்ய வேண்டும். அறுவடையை தினமும் அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்யலாம்.

  • முதல் அறுவடைக்குப் பின் காளான் படுக்கையை ஒரு தகடு கொண்டு லேசாகச் சுரண்டி விட்டு, பின்பு தண்ணீர் தெளித்து வந்தால் இரண்டு, மூன்று அறுவடைகளை மேற்கொள்ளலாம்.

அறுவடை செய்த காளான்களை பாக்கெட்டுகளில் பதப்படுத்தி விற்பனை செய்யலாம். சிப்பிக்காளானைவிட, பால் காளானுக்கு அதிக விலை கிடைக்கும். பால் காளானை ஒரு வாரம் வரை வைத்திருந்தும் விற்பனை செய்யலாம். காளான்களை முறையாக பதப்படுத்த தவறினால் அவை எளிதில் கெட்டுப்போய்விடும். அவற்றை பதப்படுத்தும் மற்றும் விற்பனை முறைகள் குறித்து அடுத்த பதிவில் பார்க்கலாம்.!

English Summary: Mushroom farming with low investment plans Published on: 03 July 2020, 05:56 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.