தமிழ்நாட்டு சட்டசபையில் நடப்பாண்டிற்கான (2023-2024) வேளாண் பட்ஜெட்டினை இன்று தாக்கல் செய்யத் தொடங்கினார் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். கம்பு, கேழ்வரகினை நேரடி கொள்முதல் செய்து நியாயவிலை கடைகளில் கிடைப்பதை அரசு உறுதிசெய்யும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக்கு வந்தது முதலே வேளாண் துறைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. கடந்த முறையினை போன்றே இந்த முறையும், வேளாண் பட்ஜெட்டினை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்ச்செல்வம் இன்று தாக்கல் செய்ய தொடங்கியுள்ளார். பச்சை துண்டு அணிந்து வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். வேளாண் பட்ஜெட் ஏன் தனி பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படுகிறது என்பதற்கு அமைச்சர் விளக்கம் அளித்தார். கடந்தாண்டில் வேளாண் துறையில் செய்த சாதனைகள் மற்றும் நடப்பாண்டில் மேற்கொள்ள புதிய திட்டங்கள், அறிவிப்புகள் குறித்த தகவலை வெளியிட்டார். அவற்றின் விவரம் பின்வருமாறு-
2504 ஊராட்சிகளில் ரூ.230 கோடியில் தானிய உற்பத்திக்கான திட்டம் செயல்படுத்தப்படும். கிராமங்கள் தன்னிறைவு பெற கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் இலவச பம்ப்செட்டுகள், இலவச பண்ணைகுட்டைகள், ஆதிதிராவிட பழங்குடியின விவசாயிகளுக்கு ஆழ்துளைக் கிணறுகள், உலர்களத்துடன் கூடிய தரம் பிரிப்புக்கூடங்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சிறுதானிய ஆண்டை முன்னிட்டு தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் செயல்படுத்தப்படும், கம்பு, கேழ்வரகினை நேரடி கொள்முதல் செய்து நியாயவிலை கடைகளில் கிடைப்பதை அரசு உறுதிசெய்யும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ரூ.87 கோடி மதிப்பில் சிறுதானிய திருவிழாக்கள் தமிழகம் முழுவதும் நடத்தப்படும். தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்தை செயல்படுத்தும் விதமாக ஊட்டச்சத்து நிறைந்த சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க ரூ.82 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதைப்போல், 1 லட்சம் ஏக்கர் பரப்பளவில் மாற்று பயிர் சாகுபடிக்கு ரூ. 16 கோடியும், நெல்லுக்கு பின் மாற்று பயிர் சாகுபடி மேற்கொள்ள ரூ. 24 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 200 வேளாண் பட்டதாரி இளைஞர்கள் தொழில் தொடங்க ரூ. 2 லட்சம் கடன் உதவி வழங்கப்படும் எனவும் அமைச்சர் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்தார். 50,000 ஏக்கரில் கூடுதலாக சிறுதானிய உற்பத்தி செய்ய நடப்பாண்டில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.
வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் அவை நடவடிக்கைகள் இன்று நிறைவடையும். நாளை புதன்கிழமை தெலுங்கு வருட பிறப்பு என்பதால் சட்டசபைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் 23 ஆம் தேதி மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு மற்றும் இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.
அதன்பின் பட்ஜெட் மீதான சட்டமன்ற உறுப்பினர்களின் விவாதம் நடைபெறுகிறது. பட்ஜெட் மீதான விவாதம் முடிவடைந்தப்பின் நிதியமைச்சர் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காண்க: