தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU) , இருபயன் வேளாண் கருவிக்கான தேசிய காப்புரிமையைப் பெற்றுள்ளது. மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள காப்புரிமைகள், வடிவமைப்புகள் மற்றும் வர்த்தக முத்திரைகளின் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் அலுவலகத்தால் இந்த காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது.
இரு பயன் வேளாண் கருவி:
வேளாண் நிலங்களில் களையெடுத்தல் மற்றும் மண் அணைத்தல் ஆகிய இரு வேலைகளையும் ஒரே கருவி மூலம் செய்யும் வகையில் இருபயன் வேளாண் கருவி வடிவமைக்கப்பட்டது. இக்கருவி, சக்கரம், கத்தி, சட்டம் மற்றும் கைப்பிடி பாகங்களைக் கொண்டது. கருவியின் சீரான இயக்கத்திற்காக இரண்டு சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. கருவியின் அடிப்பாகத்தில் உள்ள முனையில் பொருத்தப்பட்டுள்ள கத்திகள், களைகளை வெட்டுவது மட்டுமல்லாமல் மண்ணை அணைக்கும் தன்மையையும் கொண்டது. இக்களையெடுக்கும் கருவியின் கைப்பிடி உயரத்தை பயன்பாட்டுக்கு தகுந்தவாறு மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் ட்ரோன் மூலம் காற்றின் தன்மை குறித்து அளவீடு செய்யும் அமைப்பிற்கான காப்புரிமையினை கோவை வேளாண் பல்கலைக்கழகம் (TNAU) பெற்றது. அதன் தொடர்ச்சியாக தற்போது இரு பயன் வேளாண் கருவிக்கும் காப்புரிமையினை பெற்று அசத்தியுள்ளது.
ட்ரோன் மூலம் காற்றின் தன்மை அளவீடும் கருவி:
பயிர்களை தாக்கும் நோய், பூச்சிகளை கட்டுப்படுத்த ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் முறை தற்போது விவசாயிகள் பரவலாக தங்களது விளைநிலங்களில் பயன்படுத்தி வருகின்றனர். இதனிடையே கோவை வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் ட்ரோனில் உள்ள இறக்கையின் மூலம் ஏற்படும் காற்றின் விசையை அளவீடு செய்ய பிரத்யேகமாக ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பிற்கான காப்புரிமையினை ஒன்றிய அரசு வழங்கியுள்ளது.
இந்த அமைப்பின் மூலம் ட்ரோனின் இறக்கைகளில் இருந்து கீழ்நோக்கி வரும் காற்றின் வேகம் மற்றும் அதன் பரவும் தன்மையினை அளவீடு செய்து அவற்றிற்கு ஏற்ப இணைப்புக் கருவிகளை வடிவமைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
வேளாண் தொடர்பாக தொடர்ச்சியாக பல்வேறு ஆராய்ச்சிகளை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மேற்கொண்டு வருகிறது. இதனிடையே புதுதில்லியிலுள்ள இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகத்தில் செயல்பட்டு வரும் தேசிய வேளாண்மை உயர்கல்வி திட்டத்தின் கீழ் கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் (TNAU) நிறுவன மேம்பாட்டு திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி ரூ.24.85 கோடி நிதி அளித்துள்ளது. மேலும், இத்திட்டத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ.5 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது.
ஒரே மாதத்தில் அடுத்தடுத்து காப்புரிமையை கைப்பற்றியுள்ள கோவை வேளாண் பல்கலைக்கழகத்திற்கு விவசாயிகள் தரப்பில் பலர் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
pic courtesy: @BaskarPandiyan3
மேலும் காண்க:
TNAU: வேளாண் UG, Diploma படிப்புக்கு மாணவர் சேர்க்கை- முழு விவரம் காண்க