தடையில்லா மின்சாரம், புதுப்பிக்கப்பட்ட நெட்வொர்க்குகள் மற்றும் விரைவான புகார்களுக்கு தீர்வு காண்பதே முதன்மையான திட்டமாக இருக்கின்றது எனத் தமிழக மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.
தமிழகத்தில் உள்ள மூன்று கோடிக்கும் மேற்பட்ட நுகர்வோருக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதே மின்சாரத்துறையின் இலக்கு எனத் தமிழக மின்சாரம் மற்றும் ஆய்த்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழக மின்சாரத்துறையானது பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றி, புதிய மின்மாற்றிகளை நிறுவி, மின்விநியோக வலையமைப்பைப் பலப்படுத்தி வருகிறது. இந்த ஆட்சி தொடங்கியது முதலே நுகர்வோர் புகார்களை விரைவாக நிவர்த்தி செய்வது மற்றொரு முதன்மையான திட்டம் எனக் கூறியுள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில், சேதமடைந்த 40,020 மின்மாற்றிகளை மாற்றியுள்ளதாகவும், மேலும் 388 துணை மின் நிலையங்கள் கட்ட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதற்கான டெண்டர் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மேலும், 234 சட்டமன்றத் தொகுதிகளிலும், அந்தந்த எம்.எல்.ஏ.க்கள் தலைமையில், நுகர்வோர் புகார்களை விரைவாகத் தீர்ப்பதற்கு ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர, இரண்டு ஆண்டுகளில், 1.50 லட்சம் மின் இணைப்புகளை இலவசமாக வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
தற்பொழுது, எரிபொருள் விநியோக ஒப்பந்தத்தின்படி, ஒடிசாவில் உள்ள தல்சர், ஐபி பள்ளத்தாக்கு மற்றும் தெலுங்கானாவில் உள்ள சிங்கரேணி நிலக்கரி சுரங்கங்களில் இருந்து டாங்கெட்கோ நிலக்கரியை பெறுகிறது. கடந்த நிதியாண்டில் (2022-23) 192.67 லட்சம் டன் நிலக்கரி கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இனி வரவிருக்கும் அனல்மின் நிலையங்களுக்கு மட்டுமே நிலக்கரியை வாங்க திட்டமிட்டுள்ளதாகவும், மேலும் நிலக்கரி சுரங்கங்களுக்கான புதிய டெண்டர்களில் பங்கேற்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
துணை மின் நிலையங்கள், நகர மையங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளுக்கு அருகில் 100 EV சார்ஜிங் நிலையங்களை நிறுவ திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதோடு, திட்டத்திற்கான டெண்டர் தயாராக உள்ளது, விரைவில் ஏலம் திறக்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க
95 கிராமங்களுக்கு உள்கட்டமைப்பு நிதி! HCL உடன் TN ஒப்பந்தம்!!