மருத்துவ கழிவுகளை முறையாக பிரித்து, சேமித்து பொது மருத்துவ கழிவு சுத்திகரிப்பு நிலையத்திடம் மட்டுமே ஒப்படைக்க வேண்டும். இதனை பின்பற்றாமல் மருத்துவ கழிவுகளை அகற்றுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.
சுற்றுச்சூழல் வனம் மற்றும் சூழல் மாறுபாடு அமைச்சகம், மருத்துவ கழிவுகளை முறையாக சேகரித்து, பிரித்து, சுத்திகரித்து மற்றும் அகற்றுவதற்காக மருத்துவ கழிவுகள் மேலாண்மை விதிகள், 2016 ஐ அறிவித்தது.
இவ்விதிகளை பின்பற்றுவதன் மூலம் மருத்துவ கழிவுகளின் உற்பத்தியையும் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தாக்கத்தை குறைத்திட இயலும். இவ்விதிகளை அமல்படுத்த/செயல்படுத்துவதற்கான அதிகாரம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் உள்ளது. இவ்விதிகளின் படி, மருத்துவமனைகளிலிருந்து உருவாகும் மருத்துவ கழிவுகள் முறையாக பிரித்து, சேமித்து, பொது மருத்துவ கழிவு சுத்திகரிப்பு நிலையத்திடம் சுத்திகரிப்பு செய்வதற்காக ஒப்படைக்க வேண்டும். மேலும்,தொற்று ஏற்படுத்த கூடிய மருத்துவ கழிவுகளை 48 மணி நேரத்திற்கு மிகாமல் சேமித்தல் கூடாது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், மருத்துவக் கழிவுகளை முறையாக கையாளுவதற்காக அனைத்து மருத்துவமனைகள், உள்ளாட்சி அமைப்புகள், சுகாதாரத்துறை மற்றும் தொடர்புடைய துறைகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும், செய்தித்தாள்கள் மற்றும் ஊடகங்கள் வாயிலாக மருத்துவ கழிவுகளை சாலைகள், ஆற்றங்கரைகள், நீர் நிலைகள் மறைவான ஒதுங்கிய பகுதிகளில் சட்ட விரோதமாக கொட்டுவது தொடர்பாக தொடர்ந்து பல்வேறு புகார்கள் பெறப்படுகின்றன. வீடுகள், விடுதிகள், முதியோர் இல்லங்கள் போன்றவற்றிலிருந்து உருவாகும் காலாவதியான மருந்துகள், உடைந்த பாதரச் வெப்பமானிகள், பயன்படுத்தப்பட்ட ஊசிகள் மற்றும் சிரிஞ்சுகள் மற்றும் அசுத்தமான கேஜ் (gauge) போன்றவை, திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2016 இன் படி, "வீட்டு அபாயகரமான கழிவுகள்" என வரையறுக்கப்பட்டுள்ளன.
இக்கழிவுகளை முறையாக சேமித்து பொது மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு நிலையத்திடம் ஒப்படைக்க வேண்டும். இக்கழிவுகள் சுற்றுச்சூழலுக்கும் ஆரோக்கியத்துக்கும் ஆபத்தானவையாகும் மற்ற கழிவுகளுடன் நேரடியாக சேர்வதன் மூலம் பண்புகளில் மாற்றங்களைத் தூண்டலாம். உள்ளாட்சி அமைப்புகள், வீடுகள், விடுதிகளிலிருந்து உருவாகும் மருத்துவ மற்றும் திட கழிவுகளை முறையற்ற முறையில் அகற்றுவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், அத்துமீறுபவர்களின் மீது உள்ளாட்சி அமைப்புகள் உள்ளாட்சி அமைப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைத்து மருத்துவமனைகள், உள்ளாட்சி அமைப்புகள்,மருத்துவ கழிவுகளை முறையாக பிரித்து, சேமித்து பொது மருத்துவ கழிவு சுத்திகரிப்பு நிலையத்திடம் மட்டும் ஒப்படைக்க வேண்டும். மேலும், அங்கீகரிக்கப்படாத முறையில் மருத்துவ கழிவுகளை அகற்றுவதை தவிர்க்க உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு விதிகளை பின்பற்றாமல் மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.
மேலும் காண்க:
நகர்ப்புற குளிரூட்டும் திட்டம்- ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்
கடந்த 122 வருஷத்துல இப்போ தான் அதிக வெப்பம்- எச்சரிக்கும் இந்திய வானிலை மையம்