டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்திருப்பவர்கள், தயாராகும் வகையில், தமிழக அரசு சார்பில் பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் இந்தப் பயிற்சியில் கலந்துகொண்டு பயனடையுமாறுக் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். இது முழுக்க முழுக்கக் கட்டணம் இல்லாப் பயிற்சி ஆகும்.
தமிழக அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 7,300க்கும் மேற்பட்டப் பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இந்தத் தேர்வுக்கு சுமார் 21.85 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பிற்கு மே 11-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
குரூப் 4 தேர்வில் கலந்து கொள்ளும் தேர்வர்களுக்கு தமிழக அரசின் சார்பில் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையத்தால் கட்டணமில்லாப் பயிற்சி வழங்கப்டுகிறது. சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் சர் தியாகராயா கல்லூரியிலும், நத்தனத்தில் அரசினார் ஆடவர் கலைக் கல்லூரியிலும் பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை வாராந்திர வேலை நாட்களில் மூன்று மாத காலம் நடைபெற உள்ளது.
சர் தியாகராயா கல்லூரியில் 500 தேர்வர்களும், அரசினர் ஆடவர் கலைக் கல்லூரியில் 300 தேர்வர்களும் பயிற்சிக்காக அனுமதிக்கப்பட உள்ளனர். போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களில் உணவு மற்றும் தங்கும் வசதிகள் கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதி (Qualification)
குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது மற்றும் இதர தகுதிகள் குறித்த விபரங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் செக் செய்துகொள்ளலாம்.
விண்ணப்பிப்பது எப்படி?
தேர்வர்கள் அகில இந்திய குடிமைப்பணித் தேர்வு பயிற்சி மைய இணையதளமான http://www.civilservicecoaching.com/ இல், மே 11 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஒரு முறை விண்ணப்பித்த பிறகு, அதில் திருத்தம் எதுவும் மேற்கொள்ள முடியாது.
விண்ணப்பிக்கும் நபர்கள், ஜூலை 24இல் நடைபெறவுள்ள குரூப் 4 தேர்வுக்கும் விண்ணப்பித்திருக்க வேண்டியது அவசியம்.
அழைப்பு கடிதம்
தேர்வர்க்கான அழைப்புக் கடிதம், http://www.civilservicecoaching.com இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். அதனை டவுன்லோடு செய்து சேர்க்கையின்போது அவசியம் எடுத்துவர வேண்டும். பயிற்சி நாள் மற்றும் நேரம் இணையதளத்தில் மட்டுமே அறிவிக்கப்படும். இந்த அழைப்புக் கடிதம் அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படமாட்டாது.
தேர்வு செய்யும் முறை
10 ஆம் வகுப்பில் எடுத்த மொத்த மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள், தாங்கள் தேர்ந்தெடுக்கும் பயிற்சி மையத்தில் இனவாரியாக உள்ள இடங்களுக்கு ஏற்ப நேரடி பயிற்சிக்கு அழைக்கப்படுவார்கள்.
கூடுதல் விபரங்களுக்கு, இப்பயிற்சி மைய மின்னஞ்சல் முகவரியை ceccchennai@gmail.com அணுகலாம் அல்லது 044-24621475/24621909 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.
மேலும் படிக்க...
TNPSC Group 4 தேர்வு- 7301 பணியிடங்களுக்கு 21.83 லட்சம் பேர் விண்ணப்பம்!
பிச்சை எடுத்து அன்னதானத்திற்கு ரூ1 லட்சம் நிதி- பிரமிப்பூட்டிய பாட்டி!