தமிழ்நாட்டின் பல நகரங்களில் தக்காளி விலை இன்று கிலோவுக்கு ரூ.25 வரை குறைந்தது. தக்காளி வரத்து சந்தைக்கு அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் இனி வரும் நாட்களில் தக்காளி விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த ஆண்டு கோடையில் நிலவிய கடும் வெப்பத்தினாலும், முன்னர் போதிய விலை கிடைக்காத காரணத்தினாலும் நடப்பு பருவத்தில் விவசாயிகள் தக்காளியினை பயிரிட ஆர்வம் காட்டவில்லை. இதே சமயத்தில் அண்டை மாநிலங்களிலிருந்து வரும் தக்காளியின் வரத்து குறைந்ததாலும், கடந்த ஒரு மாதமாக தக்காளி விலை ஜெட் வேகத்தில் அதிகரித்தது.
வெளிச்சந்தைகளில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.190 வரை விலை உயர்ந்தது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பிரச்சினை விஸ்வரூபம் எடுத்த நிலையில் தக்காளி பொதுமக்களுக்கு உரிய விலையில் கிடைக்கும் வகையில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்தன.
அதன்படி, தமிழக அரசின் சார்பில் 62 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள், 3 நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் கொள்முதல் விலைக்கே தக்காளியானது ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது. இருப்பினும் வெளிச்சந்தையில் விலை குறையவில்லை. இதனைத்தொடர்ந்து முதற்கட்டமாக வடசென்னையில் 32 ரேசன் கடைகளிலும், தென் சென்னையில் 25 ரேசன் கடைகளிலும், மத்திய சென்னையில் 25 ரேசன் கடைகளிலும் என மொத்தம் 82 நியாய விலைக்கடைகள் மூலமாக தக்காளி விற்பனை தொடங்கப்பட்டது.
ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.25 குறைவு:
இந்நிலையில் நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.125-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று கிலோவுக்கு ரூ.25 வரை குறைந்து சில்லரை விற்பனையில் ரூ.100- ஆக விற்கப்பட்டு வருகிறது. தக்காளி வரத்து கணிசமாக அதிகரித்ததால் விலை குறைவு ஏற்பட்டுள்ளதாக சந்தை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஒன்றிய அரசின் தலையீட்டால், நாட்டின் வடமாநிலங்களிலும் தக்காளி விலை ஏற்கனவே சரிவை சந்திக்கத் தொடங்கியுள்ள நிலையில் கடந்த ஐந்தே நாட்களில் சில்லரை விலையில் 30 முதல் 100 ரூபாய் வரை குறைந்துள்ளது.
தக்காளியை கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்ய முக்கிய நகரங்களில் கூட்டுறவுக் குழுக்கள் மூலம் ஸ்டால்களை ஒன்றிய அரசு அமைத்துள்ளது. உணவு மற்றும் பதப்படுத்துதல் அமைச்சகத்தின் விலைக் கண்காணிப்புப் பிரிவின் கூற்றுப்படி, டெல்லியில் தக்காளியின் விலை கிலோவுக்கு 30 ரூபாய் குறைந்துள்ளது.
பஞ்சாபில் கூட கடந்த மூன்று நாட்களில் விலை கிட்டத்தட்ட 100 ரூபாய் குறைந்துள்ளது. மான்சா மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ரூ.197 ஆக இருந்த சில்லரை விலை திங்கள்கிழமை ரூ.103 ஆக விற்பனை ஆனது. இதேபோல், ஒன்றிய அரசு தக்காளியை ரூ.80-க்கு விற்கத் தொடங்கியதில் இருந்து சிம்லாவில் விலை குறையத் தொடங்கிய தக்காளி தற்போது ரூ.32-க்கு விற்பனையாகிறது.
மேலும் காண்க:
கரும்பு சாகுபடி, ஆடு, மாடு வளர்ப்பில் கலக்கும் சிறைக்கைதிகள்