மதுரையில் வாடகை பைக் டாக்ஸியை பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மதுரை மாநகரில் Rapido bike taxi என்ற தனியார் நிறுவனம் மதுரையில் வாடகை கார்கள் இயங்குவது போல ஆன்லைன் மொபைல் ஆப் வழியாக பொது மக்களிடம் www.rapido.bike என்ற வெப்சைட் மூலம் பொதுமக்களை தொடர்பு கொண்டு மோட்டார் வாகன விதிமுறைகளின் படி முறையான அங்கீகாரம் பெறாமல் சுமார் 2000-க்கும் மேற்பட்ட இரண்டு சக்கர வாகன உரிமையாளர்களை உறுப்பினர்களாக கொண்டு அனுமதியற்று பைக் டாக்ஸிகள் இயக்கப்பட்டு வருகிறது.
கடந்த வாரம் இதுபோன்ற 40 மோட்டார் சைக்கிள்களை போக்குவரத்து துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் மற்றும் கலெக்டர் அனீஷ் சேகர் ஆகியோர் தலைமையில் நடந்த கூட்டத்தில், மொபைல் ஆப் மூலம் பைக் டாக்ஸியுடன் கூட்டு சேருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ராபிட்டோ பைக் டேக்ஸி வாகனத்தை பறிமுதல் செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மோட்டார் வாகன விதிமுறைகளுக்கு எதிராக இயக்கப்படும் பைக் டாக்ஸி வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். வாகன உரிமையாளருக்கு ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த நிறுவனத்தின் மூலம் தங்களது இரு சக்கர வாகனங்களை வாடகை பைக் டாக்ஸிக்கு பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
வாகன நெரிசல் அதிகமுள்ள அனைத்து மாநகரிலும் Ola, Uber மற்றும் Rapido வின் பயன்பாடுகள் அதிகளவில் உள்ளது. இந்த நிறுவனங்கள் தங்களது செயலியின் வாயிலாக இருச்சக்கர, மூன்றுச்சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன டாக்ஸி சேவைகளை வழங்கி வருகிறது. இதனிடையே தான் சமீபத்தில் மதுரை காவல் ஆணையர் உத்தரவினைப் போன்று டெல்லி போக்குவரத்து துறையும் அதிரடி உத்தரவு ஒன்றினை பிறப்பித்து இருந்தது.
போக்குவரத்து அல்லாத (தனியார்) பதிவு முத்திரை/எண்களைக் கொண்ட இருச்சக்கர வாகனங்கள் பயணிகளை வாடகைக்கு ஏற்றிச் செல்லப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தனிநபர் வாகனங்களை வணிக டாக்ஸிகளாக பயன்படுத்துவது மோட்டார் வாகனச் சட்டம், 1988-ஐ மீறுவதாகும்.
எனவே Ola, Uber மற்றும் Rapido போன்ற அனைத்து வகையான நிறுவனங்களின் பைக் டாக்ஸி சேவைகளை உடனடியாக நிறுத்த வேண்டும். இந்த அறிவிப்பை மீறித் தொடர்ந்து பைக் டாக்ஸி சேவைகளை வழங்கினால் வாகன ஓட்டுநருக்கு முதல் முறை 5 ஆயிரம் ரூபாயும், 2 வது முறை 10 ஆயிரம் ரூபாய் மற்றும் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும். இதனை மீறியும் தொடர்ந்து இயக்கினால் 3 வருடங்களுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் டெல்லி போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
இதுபற்றி அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், ஓட்டுனர் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட பயணிகள் இருப்பதே டாக்ஸி சேவைகள் என வரையறுக்கப்பட்டு உள்ளது. நான்கு சக்கர டாக்ஸிகள், ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் இ-ரிக்ஷாக்கள் மட்டுமே இந்த அடிப்படையில் அனுமதிக்கப்படுகின்றன. மோட்டார் சைக்கிள்கள் இந்த வரையறைக்குள் வராது. டாக்ஸி சேவைகளை இயக்க, குறிப்பிடத்தக்க நடைமுறைகள் உள்ளன. வாகனத்தில் பதிவு முத்திரை, மஞ்சள் நிற எண் தகடுகள், போலீஸ் சரிபார்ப்புக்குப் பிறகு வழங்கப்படும் PSV பேட்ஜ் போன்றவை அடங்கும் என்றார்.
மேலும் காண்க:
அமரித் சரோவர் திட்ட பணிகளை காண ஆட்சியர் திடீர் விசிட்.. அதிர்ந்த அதிகாரிகள்