தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலம் நெருங்கி வருவதால் உடனடியாக கால்நடை விற்பனை சந்தைகளுக்கும் தளர்வு அளித்து திறக்க வேண்டும் கால்நடை வியாபாரிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்
நாட்டில் பரவி வரும் கொரானோ நோய்த்தொற்று காரணமாக கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தற்போது மெல்ல மெல்ல சிறிது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் வாரந்தோறும் கால்நடை சந்தைகள் நடைபெறுவது வழக்கம்.
சந்தைகள் மூடல்
திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையம், நயினாரகரம், கடையம் உள்ளிட்ட இடங்களில் ஆட்டுச் சந்தைகளுடன் கூடுதலாக மாட்டுச் சந்தைகளும் நடைபெற்று வருகின்றன. கொரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கால்நடைச் சந்தைகள் திறக்கப்படவில்லை. பொது முடக்க தளர்வுகள் அறிவிக்கப்பட்டதில், கால்நடை சந்தைகளுக்கு விலக்கு அளிக்கப்படாததால் இன்னும் திறக்கப்படாமல் உள்ளன.
இறைச்சி விலை அதிகரிப்பு
இதனால், ஆடு, மாடு, கோழிகளின் இறைச்சி விலை அதிகரித்துள்ளதோடு, சிறிய கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள் இடைத்தரகர்களிடம் மிகவும் குறைந்த விலைக்கு ஆடு, மாடுகளை விற்பனை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
சந்தைக்கு வெளியே விற்பனை
தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகள் நெருங்கி வரும் நிலையில், கால்நடை சந்தைகளுக்கு விலக்கு அளிக்க வியாபாரிகளும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், தற்போது சந்தைகளின் அருகிலேயே கால்நடைகளை விற்பனை செய்ய தொடங்கி விட்டனர். மேலப்பாளையத்தில் கால்நடைச் சந்தை அருகேயுள்ள சாலையோரம் ஏராளமான வியாபாரிகள் தங்களது ஆடு, கோழிகளை விற்பனை செய்து வருகின்றனர்.
சந்தையை திறக்க வலியுறுத்தல்
இது குறித்து வியாபாரிகள் கூறுகையில் : கால்நடை சந்தைகள் அரசு அனுமதியோடு திறக்கப்பட்டால் மட்டுமே கூடுதலான வியாபாரிகள் சந்தைகளுக்கு வர முடியும். சாலையோரம் விற்பனை செய்வதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து கால்நடை சந்தைகளைத் திறக்க அரசு அனுமதிக்க வேண்டும் என்றனர்.
மேலும் படிக்க...
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் தமிழகத்தில் தொடங்கி வைத்தார் - எடப்பாடி பழனிசாமி!
எத்தனால் உற்பத்தியை அதிகரிக்க சர்க்கரை ஆலைகளுக்கு கடன் சலுகை! - முழு விபரம் உள்ளே!
ரூ.174 கோடி செலவில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டம்! அக்1 முதல் திருச்சியில் தொடக்கம்!