கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை சந்தையில் வெண்டைக்காய் விலை கிலோவுக்கு ரூ.50 என கொள்முதல் ஆன நிலையில், திருச்சி மாவட்டத்தில் 45 நாள் பயிர் சாகுபடியான வெண்டைக்காயினை பயிரிட மிகுந்த ஆர்வத்தில் களமிறங்கினர்.
இந்நிலையில், சந்தையில் யாரும் எதிர்ப்பாராத வகையில் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றனர். முதலுக்கே மோசமான விரக்தியில் பல்வேறு விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட வெண்டையினை அறுவடை செய்யாமல் நிலத்திலேயே உழுதுவிடும் சம்பவமும் அரங்கேறி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஒரு மாதத்திற்கு முன்பு இந்தியா முழுவதும் தக்காளி விலைக்கு படு கிராக்கி ஏற்பட்டது. கிலோ ரூ.200 வரை கூட சென்றது. தக்காளி பயிரிட்டு கோடீஸ்வரர் ஆகிய விவசாயி என பக்கம் பக்கமாக செய்திகள் வெளிவந்தன. தக்காளியினை தொடர்ந்து மற்ற காய்கறிகளுக்கும் நல்ல டிமாண்ட் வந்தது. அதில் ஒன்று தான் வெண்டை, சந்தையில் கொள்முதல் விலை மட்டுமே கிலோவுக்கு ரூ.50 வரை போனது.
குறுகிய கால பயிர் என்பதால் வெண்டையினை சாகுபடி செய்ய ஆர்வத்துடன் களமிறங்கிய விவசாயிகள் தற்போது கண்ணீர் மல்க செய்வதறியாவது திகைத்து போய் நிற்கின்றனர். தற்போது சந்தையில் கிலோ வெறும் ரூ.2 க்கு கொள்முதல் செய்யப்படு சூழ்நிலை உருவாகியுள்ளதே இதற்கு காரணம்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை மொத்த விற்பனை சந்தையில் செவ்வாய்கிழமை ஒரு கிலோ வெண்டைக்காய்கள் ரூ. 2.20-க்கு கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் விவசாயி ஒருவர் கூறியதாவது: "எங்கள் கிராமத்தில் வெண்டைக்காய்கள் 40 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்டுள்ளன. தகுந்த விலையை எதிர்பார்த்த பல விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்கின்றனர்."
இந்த பருவத்தில் மாவட்டம் முழுவதும் 102 ஏக்கரில் காய்கறி சாகுபடி செய்யப்பட்டுள்ளதாக தோட்டக்கலைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. மற்றொரு விவசாயி கூறுகையில், “ பயிரிடுள்ள வெண்டையினை ஒரு ஏக்கருக்கு மேல் அறுவடை செய்ய, மூன்று தொழிலாளர்கள் தேவை. அவர்களுக்கு இரண்டு மணி நேர வேலைக்கு தலா 100 ரூபாய் கொடுக்க வேண்டும். போக்குவரத்து செலவு வேற. ஒரு ஏக்கர் சாகுபடிக்கு, விதைகளுக்கு, 7,000 ரூபாயும், விவசாய இடுபொருட்களுக்கு, 5,000 ரூபாயும் முதலீடு செய்தேன். நேற்று 40 கிலோ வெண்டையினை 200 ரூபாய்க்கு விற்றேன் (கிலோ-5).” என வேதனை தெரிவித்துள்ளார். பொதவூர், கிளியூரில் பல விவசாயிகள் விவசாய விளைபொருட்களை அழித்துவிட்டனர் எனவும் கூறப்படுகிறது.
விவசாயிக்கு நஷ்டம் ஏற்படாமல் இருக்க காய்கறிகள் கிலோவுக்கு குறைந்தபட்சம் ரூ.20 என்கிற அளவிலாவது கொள்முதல் விலையை நிர்ணயிக்க வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். வெண்டை மட்டுமில்லாது இதர காய்கறிகளின் விலையும் இப்போது குறைவாகவே உள்ளது. கடந்த வாரம் கூட தக்காளியின் விலை படு வீழ்ச்சி அடைந்த நிலையில் அதனை ஏரியில் கொட்டிய இளைஞரின் வீடியோ இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண்க:
கடைசி சான்ஸ்- இலவசமாக ஆதார் அப்டேட் பண்ண இதை செய்யுங்க
கடலூர்- கரூர் மாவட்ட KVK சார்பில் விவசாயிகளுக்கு பயிற்சி- முழு விவரம்