காவிரி டெல்டாவில் புதிதாக 3 நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க எந்த காலத்திலும் அனுமதி கிடையாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் உறுதி அளித்த நிலையில், ஒன்றிய அரசு தற்போது திட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளது.
தமிழகத்திலுள்ள பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் அடங்கிய பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கான ஆய்வில் ஒன்றிய அரசு ஈடுபட உள்ளதாக அறிவிப்பு வெளியான நிலையில் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகள் உண்டாகியது.
அரசியல் தலைவர்கள் முதல் விவசாயிகள் வரை எதிர்ப்புத் தெரிவித்த நிலையில் தமிழக சட்டப்பேரவையில் இது தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. நிலக்கரி எடுக்க அனுமதிக்கக்கூடாது என பல்வேறு கட்சித்தலைவர்கள், எம்.எல்.ஏ-க்கள் சிறப்பு தீர்மானத்தின் கீழ் உரையாற்றிய நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும், ”நிச்சயமாக சொல்கிறேன் முதலமைச்சராக மட்டுமல்ல; நானும் டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்கிற முறையில் நிலக்கரி எடுக்கும் ஒன்றிய அரசின் முடிவுக்கு எதிராக நீங்களெல்லாம் எப்படி உறுதியாக இருக்கிறீர்களோ, அதைவிட அதிகமாக, நானும் உறுதியாக இருப்பேன். எந்தக் காரணத்தைக் கொண்டும், பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதியில் நிலக்கரி எடுக்க நம்முடைய தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்காது; அளிக்காது; அளிக்காது” என தெரிவித்திருந்தார்.
ஒன்றிய அமைச்சர் பதில்:
மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து சுரங்கம் அமைக்கும் திட்டம் கைவிடப்படுவதாக ஒன்றிய நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். இன்று சென்னையில் பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைக்க பிரதமர் மோடி தமிழகம் வரும்நிலையில் இந்த உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு அரசு விரைந்து எடுத்த நடவடிக்கைகள் காரணமாகவே நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டம் ரத்தாகி உள்ளது என டெல்டா விவசாயிகள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
நிலக்கரி எடுக்க திட்டமிடப்பட்ட பகுதிகள்:
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டத்தில் மைக்கேல்பட்டி, கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம், சேத்தியாத்தோப்புக்கு கிழக்கே உள்ள பகுதி மற்றும் தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்தில் வடசேரி ஆகிய இந்த மூன்று பகுதிகளும் தமிழ்நாட்டின் காவிரி டெல்டா பகுதியில் உள்ளவை ஆகும்.
இதில் வடசேரி மற்றும் சேத்தியாத்தோப்பின் கிழக்குப் பகுதிகள் தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டுச் சட்டம் 2020 இன் கீழ் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்குள் வருகின்றன, அதே நேரத்தில் மைக்கேல்பட்டி ஒன்றியம் காவிரி டெல்டாவின் மிகவும் வளமான பகுதியை ஒட்டிய ஒரு பெரிய நெல் விளையும் பகுதியில் அமைந்துள்ளது.
மேற்குறிப்பிட்ட சட்டத்தின் பிரிவு 4 (1) இன் படி, "பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் இரண்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு புதிய திட்டத்தையும் அல்லது புதிய செயல்பாட்டையும் எந்தவொரு நபரும் மேற்கொள்ளக்கூடாது" என்று வகுக்கப்ட்டுள்ளது. இரண்டாவது அட்டவணையில் உள்ளடக்கப்பட்ட மற்றும் தடைசெய்யப்பட்ட திட்டங்களில் "நிலக்கரி படுகை மீத்தேன், ஷேல் எரிவாயு மற்றும் பிற ஒத்த ஹைட்ரோகார்பன்கள் உள்ளிட்ட எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை ஆய்வு செய்தல், துளையிடுதல் மற்றும் பிரித்தெடுத்தல்" ஆகியவை அடங்கும்.
தற்போது வெளியிடப்பட்டுள்ள டெண்டர் நிபந்தனைகளில் நிலக்கரி படுகை மீத்தேன் சுரண்டலும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அவை தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டுச் சட்டம், 2020 இன் தடைக்குள் அடங்கும் என முதல்வர் இதுதொடர்பாக பிரதமருக்கு கடிதம் அனுப்பியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் காண்க:
எங்களிடம் எதுவும் சொல்லாம.. ஏன் இப்படி? நிலக்கரி விவகாரம்- பிரதமருக்கு முதல்வர் கடிதம்