போலி பத்திரப்பதிவு செல்லாது! உடைமையாளருக்கே சொத்து வந்தடையும்!! புதிய திட்டத்தினைத் தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்!!
போலியான நிலப்பத்திரப்பதிவினை ரத்து செய்யும் உரிமையினைப் பதிவுத்துறைக்கு வழங்கினார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின். போலியான ஆவணங்களின் மூலம் பதிவு செய்யப்பட்ட நிலங்களின் பதிவினை ரத்து செய்யும் உரிமை இனி பதிவுத்துறைக்கு வழங்கப்பட்டதைத் தொடங்கி வைக்கும் விதமாக, போலி ஆவணப்பதிவினால் பாதிக்கப்பட்ட உண்மையான சொத்து உரிமையாளர்கள் ஐந்து பேருக்கு அவர்களது சொந்த நிலத்தினை வழங்கினார். அதைத் தொடர்ந்து அதிக ஆவணங்கள் பதிவு செய்யும் நூறு சார்பதிவாளர் அலுவலகங்களில் உடனடி டோக்கன் வழங்கும் திட்டத்தினையும், கூடுதல் டோக்கன் வழங்கும் திட்டத்தினையும் தொடங்கி வைத்தார்.
மேலும் படிக்க: 7th Pay Commission: 4% உயர்ந்தது அரசு ஊழியர்களின் அகவிலைப்படி!
இளைஞர்களுக்கான புத்தாய்வு திட்டம்- தொடங்கி வைத்தார் மு.க. ஸ்டாலின்!
தமிழக இளைஞர்களுக்கான புத்தாய்வு திட்டத்தினைச் சென்னை அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில் இன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அரசுக்கு உதவும் வகையில் 30 இளைஞர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு கல்வி மற்றும் தொழில் முறையில் 2 ஆண்டுகள் பயிற்சியுடன் கூடிய ஊக்கத்தொகை வழங்கும் நோக்கில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பயிற்சியின்போது மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டி ரூ. 5.66 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்பட்ட இளைஞர்கள் முதல்வர் அலுவலகத்தில் அரசின் முதன்மைத் திட்டங்களுக்கு உதவுவார்கள் எனக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க: PM Kisan: ரூ. 2000 பற்றித் தெரிந்துகொள்ள இந்த நம்பரை அழையுங்க!
கூடுதலாக வழங்கப்படும் 5 கிலோ இலவச அரிசி திட்டம் தொடரும்! மத்திய அரசு அறிவிப்பு!
எளிய மக்களுக்கு 5 கிலோ கூடுதல் இலவச ரேஷன் பொருட்களை வழங்குவதற்கான பிரதமர் கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை அடுத்த மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 2020ஆம் ஆண்டில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இன்று வரை இலவசப் பொருட்களுக்கு மேல் கூடுதலாக இந்த 5 கிலோ உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன. இத்திட்டம் செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இன்னும் இரு தினங்களில் இத்திட்டம் முடிவுக்கு வர இருந்த நிலையில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இத்திட்டத்தினை டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மாதம் ரூ.50,000 தரும் பாக்குமட்டைத் தட்டு தொழில்! சாதனை படைக்கும் விவசாயி!
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள சேந்தன்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவர் ஐடிஐ தொழிற்கல்வி படிப்பை முடித்து விட்டு பாக்குமட்டையில் தட்டு தயாரிக்கும் சுயதொழிலைச் செய்து வருகிறார். தொடக்கத்தில் அரசு மானியத்துடன் 4,50,000-ஐ முதலீடாக போட்டு 5 வகையான தட்டு தயாரிக்கும் இயந்திரங்களை வாங்கி இந்த தொழிலைத் தொடங்கினார். தற்போது இத்தயாரிப்புகளுக்கான தேவை மார்க்கெட்டில் அதிகம் இருப்பதால் மாதம் சுமார் ரூ.50,000 வரை வருமானம் கிடைப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 38%-ஆக உயர்ந்துள்ளது!
மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியில் 4 சதவிகித அதிகரிப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது மகிழ்ச்சிக்குரிய செய்தியாக இருக்கிறது. தற்பொழுது இருக்கும் 34% அகவிலைப்படியானது 38% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி முதல் அரசாங்கத்தின் அகவிலைப்படி உயர்வு அமலுக்கு வரும் எனக் கூறப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவால் தற்போதுள்ள 50 லட்சம் மத்திய ஊழியர்களும், 62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தமிழகத்தில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்!
தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. கோவை மாவட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது குறைகள் மற்றும் விவசாயம் குறித்தும் அதன் தொடர்புடைய துறைகள் குறித்தும் குறைகளைத் தெரிவிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த மாதத்துக்கான கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஜி.எஸ்.சமீரன் தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு கோரிக்கைகள் குறித்து மனுக்கள் கொடுக்கலாம். வோளண்மை, தோட்டக்கலைத்துறை, நீர்பாசனம், கூட்டுறவு, தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம், கால்நடை, மின்சாரம், தொடர்புடைய கருத்துக்களை விவசாயிகள் தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
பயிர்களுக்கான இந்தியாவின் 42-வது தேசிய மாநாட்டுப் பொதுக்கூட்டம்!