News

Tuesday, 04 May 2021 10:12 AM , by: Elavarse Sivakumar

Credit : Daily Excelsior

கொரோனாத் தொற்றுப்பரவலைத் தடுக்க ஏதுவாகப் மேலும் சில புதியக் கட்டுப்பாடுகளைத் தமிழக அறிவித்துள்ளது. இதன்படி காய்கறி, மளிகை மற்றும் டீக்கடைகள் வரும் 6ம் தேதி முதல் பகல் 12 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது.

கொரோனா 2-வது அலை (Corona 2nd wave)

கொரோனா பரவலின் 2-வது அலை தமிழகத்தில் கோர தாண்டவம் ஆடி வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 20 ஆயிரத்து 952 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவலின் 2-வது அலை தமிழகத்தில் கோரத் தாண்டவம் ஆடி வருகிறது.

இந்நிலையில் கொரோனா பரவலை தடுப்பதற்கு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று அதிகாரிகளிடம், புதிய முதல்வராகப் பொறுப்பேற்க உள்ளவரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

மே 20ம் தேதி வரை (Until May 20th)

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த ஏதுவாக வரும் 6-ந் தேதி காலை 4 மணி முதல் 20-ம் தேதி காலை 4 மணி வரை புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

50 சதவீத பணியாளர்கள் (50 percent employees)

அனைத்து அரசு அலுவலகங்களும், தனியார் அலுவலகங்களும் அதிகபட்சம் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

50 சதவீதம் (50 percent)

  • பயணிகள் ரயில், மெட்ரோ ரயில், தனியார் பஸ்கள், அரசு பஸ்கள் மற்றும் வாடகை டாக்சி ஆகியவற்றில் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பொதுமக்கள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படுகிறது.

  • வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு கடைகள் மற்றும் காய்கறி கடைகளுக்கு அனுமதி இல்லை. இவைத் தவிர, தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் குளிர்சாதன வசதி இன்றி பகல் 12 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது.

  • இவற்றில், ஒரே சமயத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.

  • இந்த மளிகை, பலசரக்கு மற்றும் காய்கறி கடைகள் தவிர, இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்படுகிறது.

தடை இல்லை (No ban)

  • மருந்தகங்கள், பால் வினியோகம் போன்ற அத்தியாவசியப் பணிகள் வழக்கம் போல எந்த தடையுமின்றி செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

  • அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும். டீ கடைகள் பகல் 12 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.

அனுமதி இல்லை (Not allowed)

  • உணவகங்கள், டீ கடைகளில் உட்கார்ந்து உண்பதற்கு அனுமதி இல்லை.

  • ஏற்கனவே, இறப்பு சார்ந்த நிகழ்வுகளில், 25 நபர்களுக்கு மிகாமல் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகளில் 20 நபர்களுக்கு மேல் அனுமதி இல்லை.

அவசரத் தேவை (Urgent need)

அவசர மருத்துவ தேவைகளுக்கும், விமானநிலையம், ரெயில் நிலையம் செல்ல மட்டும் வாடகை ஆட்டோ, டாக்சி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படும்.
மேலும், அத்தியாவசியப் பணிகளான பால் வினியோகம், தினசரி பத்திரிகை வினியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், சரக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள் இரவு நேர ஊரடங்கின் போது அனுமதிக்கப்படும்.

தொழிற்சாலைகளுக்கு அனுமதி (Permission for factories)

தடையின்றி தொடர்ந்து செயல்படவேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இரவு நேர ஊரடங்கின்போது செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.

அடையாள அட்டை (Identity Card)

  • மேலும், இந்த நிறுவனங்களில் இரவு நேர பணிக்கு செல்லும் பணியாளர்களும், தனியார் நிறுவனங்களின் இரவு காவல் பணிபுரிபவர்களும், தொடர்புடைய நிறுவனங்களால் வழங்கப்பட்ட அடையாள அட்டை அல்லது அனுமதி கடிதம் வைத்திருப்பின், வீட்டில் இருந்து பணியிடத்திற்கு சென்று வீடு திரும்ப அனுமதிக்கப்படுகிறது.

  • முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்களில், உணவகங்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது.

  • ஸ்விக்கி, சோமட்டோ போன்ற மின் வணிகம் மூலம் உணவு வினியோகம் செய்யும் நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படுகின்றது.

    மற்ற மின் வணிக நிறுவனங்களின் சேவைகளுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் அனுமதி இல்லை.

  • ஊடகம் மற்றும் பத்திரிகை துறையினர் தொடர்ந்து பணியாற்றலாம்.

  • தடையின்றி தொடர்ந்து செயல்படவேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.

இறைச்சிக் கடைகள் (Meat Stall)

ஏற்கனவே உத்தரவிட்டபடி சனிக்கிழமைகளில், மீன் மார்க்கெட், மீன் கடைகள், கோழி இறைச்சிக் கடைகள் மற்ற இறைச்சிக் கடைகள் செயல்பட அனுமதி இல்லை. இதர நாட்களில் காலை 6 மணி முதல் 12 வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

பொதுமக்கள் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டுமென அரசு கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

தடுப்பூசி விலையை நிர்ணயம் செய்ய தயாரிப்பு நிறுவனங்களுக்கு அதிகாரம் இல்லை! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சில மாதங்களுக்கு இந்தியாவில் தடுப்பூசி தட்டுப்பாடு நீடிக்கும்! சீரம் அதிகாரி அதிர்ச்சி தகவல்!

கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்க 8 பள்ளிகள் ஒப்படைப்பு- ஈஷா நடவடிக்கை!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)