தமிழ்நாடு உள்பட, 11 மாநிலங்களில் நியாய விலைக் கடைகளில், பிரதமரின் இலவச உணவு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவுப் பொருட்களில் கோதுமை விநியோகம் நிறுத்தப்பட்டு உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை மாதந்தோறும் அரிசி, சர்க்கரை, பாமாயில் மற்றும் பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வகையில், பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ், மாதந்தோறும், நாடு முழுவதிலும் உள்ள கிட்டத்தட்ட 81 கோடி மக்களுக்கு, 5 கிலோ உணவு தானியம் வழங்கப்பட்டு வருகிறது.
கோதுமை (Wheat)
கடந்த இரண்டு ஆண்டுகளாக, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இத்திட்டம், வருகின்ற அக்டோபர் மாதம் வரை ஆறு மாத காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நடப்பாண்டு கோடை வெயிலின் தாக்கத்தால், கோதுமைப் பயிர்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், கோதுமைத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கோதுமை கொள்முதல் செய்வதும், தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஆகையால், கோதுமைக்கு பதிலாக, அரிசியை கூடுதலாக வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநில உணவுத் துறைக்கு, மதிய உணவு துறை செயலர் சுதன்சு பாண்டே கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இக்கடிதத்தில், தானியங்களை எவ்வாறு விநியோகிக்க வேண்டும் என்பதை மாநில அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு, கேரள மற்றும் பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் பிரச்சனை இல்லை என்றாலும் கூட, கோதுமைக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதால், உத்திர பிரதேசத்தில் சில சிக்கல் இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். நாட்டில், கோதுமை பயன்பாடு மற்றும் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக, இந்த கடினமான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுதன்சு பாண்டே அறிவித்துள்ளார். நடப்பாண்டு கொள்முதல் பருவத்தில், கடந்த 15 வருடங்களில், இந்த வருடம் தான் மிக குறைந்த அளவில் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவால், கரீப் கல்யாண் அன்னயோஜனா திட்டத்தின் கீழ், 55.50 லட்சம் டன் கோதுமையை அரசாங்கத்தால் சேமிக்க முடியும் என்று உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க