கோவையில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி இல்ல திருமண விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். கோவை கொடிசியா வளாகத்தில் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் மகன் கௌசிக் தேவ்விற்கும், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி பேத்தி ஸ்ரீநிதிக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருமணத்தை நடத்தி வைத்தார்.
பின்னர் திருமண விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், 1972 ம் ஆண்டு பொங்கலூர் பழனிச்சாமி திருமணத்தையும், 1999 ல் பொங்கலூர் பழனிச்சாமி மகன் பைந்தமிழ்பாரி திருமணத்தையும் கருணாநிதி நடத்தி வைத்தார் எனவும், அவர் இருந்திருந்தால் இந்த திருமணத்தையும் நடத்தி இருப்பார் எனவும் தெரிவித்தார்.
பொங்கலூர் பழனிச்சாமி மற்றும் மதியழகன் ஆகியோரின் கட்சி செயல்பாடுகள் குறித்து பாராட்டு தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், இது ஒரு சீர்திருத்த திருமணமாக , சுயமரியாதை உணர்வோடு, தமிழ் திருமணமாக நடந்து இருக்கின்றது என்று தெரிவித்தார். இது போன்ற சீர்திருத்த திருமணங்கள் 1967 முன்பு சட்ட உரிமையில்லை என தெரிவத்த அவர், அண்ணா தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் சீர்திருத்த திருமணத்தை சட்ட அங்கீகாரமாக்கி முறைப்படி செல்லுபடியாகும் என்று கொண்டு வந்தார் என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் திமுக ஆட்சி 6 வது முறையாக நடைபெற்று வருகிறது எனவும், தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகள் அத்தனையும் நிறைவேற வில்லை, 70 சதவீதம் நிறைவேற்றி இருக்கின்றோம் எனவும், மீதமுள்ள 30 சதவீதத்தையும் விரைவில் நிறைவேற்றுவோம் எனவும் தெரிவித்தார். மக்கள் எதிர்பார்த்து நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர் என தெரிவித்த முதல்வர், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு வந்த போது மக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டோம் எனவும், ஆட்சிக்கு வந்த 100 நாளில் தீர்க்கப்படும் என உறுதியளித்தோம் என தெரிவித்த அவர் ஆட்சிக்கு வந்தவுடன் இதற்காக ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் குழு அமைக்கப்பட்டு, பெறப்பட்ட மனுக்களில் உள்ள கோரிக்கைகள் 70 சதவீதம் நிறைவேற்றப்பட்டது எனவும் தெரிவித்தார்.
மேலும் இன்று வரும் போது கூட சிலர் பெண்களுக்கான உரிமை தொகை குறித்து கேட்டார்கள். பெண்களுக்கு 1000 ரூபாய் உரிமை தொகை நிதி நிலைமை சரியானவுடன் நிச்சயமாக, உறுதியாக வழங்கப்படும் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இந்த திருமண விழாவில் தமிழக அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.
மேலும் படிக்க:
ஊழல் ஒழிப்பில் பாஜக இரட்டை வேடம், மக்கள் நீதி மய்யம் குற்றச்சாட்டு