தமிழ்நாட்டில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 ரேஷன் கடைகளிலேயே வழங்குவதற்கு ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதற்கான அறிவிப்பை முதலமைச்சர் ஸ்டாலின் விரைவில் வெளியிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 2021ஆம் ஆண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரொக்கப் பணம் மற்றும் அரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டது. 2022ஆம் ஆண்டு வழங்கப்பட்ட பரிசு தொகுப்பில் இருந்த வெல்லம் உருகியது என விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், 2023ஆம் ஆண்டு பொங்கல் பரிசாக அரிசி, சர்க்கரை, முந்திரி, ஏலக்காய், திராட்சை, கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1000 ரொக்கம் வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அந்த தொகையை வங்கிக்கணக்கில் செலுத்தலாமா? ரேஷன் கடைகளின் மூலம் வழங்கலாமா என ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
வங்கிக்கணக்கில் செலுத்துவதே பயனாளர்களுக்கு நேரடியாக செல்லும் எனவும் பரிமாற்றம் எளிதாக இருக்கும் எனவும் நிதித்துறை ஆலோசனை வழங்கியுள்ளது. இதையடுத்து, குடும்ப அட்டையுடன் வங்கிக்கணக்கு, ஆதார் இணைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் 2.23 கோடி குடும்ப அட்டைகளில் 14.9 லட்சம் அட்டைகளில் வங்கிக்கணக்கு, ஆதார் இணைக்கப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டது. இவற்றை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ரொக்கமாகவே 1,000 ரூபாயை நேரடியாக வழங்கலாம் என ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதனை விரைவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க: