வாழை உற்பத்தியில், உலகளவில் இந்தியாவின் பங்களிப்பு மிக முக்கியமானது. மொத்த வாழை உற்பத்தியில், 2018-19 இல் சுமார் 26.61% இந்தியா பங்களித்திருக்கிறது. தேசிய தோட்டக்கலை வாரியத்தின் (National Horticultural Board) இரண்டாவது முன்கூட்டிய அறிக்கையின்படி, 2019-20 ஆம் ஆண்டு இந்தியாவில், வாழை 8.78 இலட்சம் ஹெக்டேர் பரப்பளவில், சாகுபடி (Cultivation) செய்யப்பட்டு, 315.04 லட்சம் டன்கள் உற்பத்தியாகும் என்று அறிவித்துள்ளது. ஆந்திரப்பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், கர்நாடகா, மத்தியப் பிரதேசம் மற்றும் கேரளா ஆகியவை வாழை பயிரிடப்படும் முக்கிய மாநிலங்களாகும்.
தமிழகம் முதலிடம்:
மண் மற்றும் தட்பவெட்ப சூழ்நிலை (Climate) காரணமாக பூவன், கற்பூரவள்ளி மற்றும் நேந்திரன் ஆகிய ரகங்கள் உற்பத்தியில் தமிழ்நாடு முதன்மையாகத் திகழ்கிறது. ஈரோடு, தேனி, தூத்துக்குடி, கடலூர், திருச்சி, கோயம்புத்தூர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வாழை அதிகளவில் பயிரிடப்படுகிறது. பூவன் ரகமானது தமிழ்நாடு மற்றும் கேரளாவின் சில பகுதிகளில் இலை நோக்கத்துக்காகவும் பயிர் செய்யப்படுகிறது. வாழையிலையும் நல்ல விலைக்கு, விற்கப்படுகிறது.
வாழை வரத்து:
தற்போது கோயம்புத்தூர் மற்றும் திருச்சி சந்தைகளுக்கு தஞ்சாவூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சி மற்றும் கடலூர் ஆகிய பகுதிகளிலிருந்து பூவன் வரத்தும், சத்தியமங்கலம், கோபிசெட்டிப்பாளையம் ஆகிய பகுதிகளிலிருந்து கற்பூரவள்ளி வரத்தும் வருகிறது. நேந்திரன் வரத்தானது, மேட்டுப்பாளையம் மற்றும் கேரளாவிலிருந்து வருகிறது. வரும் மாதங்களில் வாழைக்கான தேவை, நிலையானதாக இருக்கும். இதனால், விற்பனை தங்கு தடையின்றி நிகழும்.
விலை மற்றும் சந்தை குறித்து ஆய்வு:
விவசாயிகள், விற்பனை முடிவுகளை எடுக்க ஏதுவாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் (TamilNadu Agricultural University) வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும், தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் (TamilNadu Irrigation Agricultural Development Project), விலை முன்னறிவிப்புத் திட்டம், கடந்த 10 ஆண்டுகளாகக் கோயம்புத்தூர் சந்தையில் நிலவிய பூவன், கற்பூரவள்ளி மற்றும் நேந்திரன் விலை மற்றும் சந்தை குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆய்வு முடிவின் அடிப்படையில், நவம்பர் 20 முதல் டிசம்பர் 20 வரை பூவன் வாழையின் சராசரி பண்ணை விலை கிலோவுக்கு ரூ.12-ம், கற்பூரவள்ளி ரூ.20 மற்றும் நேந்திரன் வாழையின் பண்ணை விலை கிலோவுக்கு ரூ.30 வரை இருக்கும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், பருவமழை (Monsoon) மற்றும் எதிர்வரும் விழாக்காலங்கள், எதிர்கால விலையை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் அடிப்படையில் விவசாயிகள், தகுந்த விற்பனை முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்படுகின்றனர்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க...
பப்பாளி விவசாயத்தில் உச்சம் தொட்ட இயற்கை விவசாயி உமாபதி!
கோவையில் சாகுபடி செய்யப்படும், குஜராத்தின் டிராகன் பழம்! குறைந்த முதலீட்டில் அதிக வருமானம்!
வெங்காயத்தைப் பாதுகாக்கும், பழங்கால வெங்காயப் படல் முறையில், விற்பனையும், விதை சேமிப்பும்!