Krishi Jagran Tamil
Menu Close Menu

பப்பாளி விவசாயத்தில் உச்சம் தொட்ட இயற்கை விவசாயி உமாபதி!

Tuesday, 01 September 2020 09:05 PM , by: KJ Staff
பப்பாளி விவசாயத்தில் உச்சம் தொட்ட இயற்கை விவசாயி

"உழவில்லையேல் உயர்வில்லை" என்பது நிதர்சனமான உண்மை. உழவுக்கு உழைப்பைத் தந்து உயர்ந்த விவசாயிகள் பலர். பழங்காலத்தில் இயற்கை விவசாயம் செயற்கைக்கு மாறி, தற்போது இயற்கையை நோக்கிப் பயணிக்கிறது. பப்பாளி சாகுபடியில் (Papaya Cultivation) உச்சம் தொட்ட இயற்கை விவசாயி உமாபதியின் நேர்காணலைக் (Interview) காண்போம்.

முதலில் தங்களின் விவசாய ஆர்வம் பற்றி கூறுங்கள்?

நான் உமாபதி. வேலூர் மாவட்டத்தை எனது பூர்விகம். எனது தந்தையிடம் இருந்து விவசாய நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டேன். மண்ணின் மீதிருந்த அதீத அன்பு தான் என் விவசாய வாழ்க்கைக்கு அடித்தளமிட்டது. பயிர் சுழற்சி முறையில் (Crop Rotation System) வெண்டை மற்றும் பப்பாளியை பயிர் செய்து வருகிறேன்.

பப்பாளியின் விளைச்சல் பற்றி கூறுங்கள்?

எனக்கு நல்ல இலாபம் தரக்கூடியது. பப்பாளிச் செடிகளை தோட்டக்கலைத் துறையிடமிருந்து (Horticulture Department) இலவசமாக பெற்றுக் கொள்வேன். நான் குறைந்த அளவில் 50 சென்ட் நிலப்பரப்பில் தான் விவசாயம் செய்கிறேன். 6×6 அடி இடைவெளியில் பப்பாளிச் செடிகளை நடுவேன். 7 முதல் 8 மாதங்களில் 10 அடி வரை வளரும். வாரமிருமுறை பப்பாளி பழங்களை (Papaya) அறுவடை செய்து சந்தையில் மொத்த விலைக்கு விற்பேன். 2 வருடங்கள் வரை பப்பாளி மரம் பழங்களைத் தர வல்லது. வேலூர் சந்தை மட்டுமின்றி சென்னையிலும் வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப விற்பனை செய்கிறேன்.

வெண்டை சாகுபடி

வெண்டை இலாபகரமான பயிரா?

ஆம், வெண்டை எனக்கு அதிக இலாபம் தரக்கூடிய ஒரு குறுகிய காலப் பயிர். வெண்டை பயிரிட்ட 45 முதல் 50 நாட்களுக்குள் அறுவடைக்குத் தயாராகி விடும். அதன் பின், தினந்தினம் 1 மாதம் வரை வெண்டையை அறுவடை (Harvest) செய்து மொத்த விலைக்கு விற்பேன். 1 மாதத்திற்கு பின் ஒன்றுவிட்டு ஒரு நாள் அறுவடை செய்வேன். 1 கிலோ வெண்டை ஏறக்குறைய ரூ. 30 முதல் 40 வரை விற்கிறது.

இயற்கை உரங்களை பயன்படுத்த தூண்டியது எது?

மாதந்தோறும் விவசாயிகள் சந்திப்பு கூட்டத்திற்கு செல்வேன். அங்கு விவசாயிகள் தங்களது அனுபவங்களையும், நுணுக்கங்களையும் பகிர்ந்து கொள்வார்கள். அப்போது பல விவசாயிகள் இயற்கை விவசாயத்தின் அவசியத்தை எடுத்துரைத்தனர். பின்பு, பல பத்திரிகைகளில் இயற்கை விவசாயம் பற்றிய பல தகவல்களை அறிந்து கொண்டேன். அதன் பிறகே, இயற்கை விவசாயத்தில் கால்தடம் பதித்தேன். கடந்த 5 வருடங்களாக இயற்கை விவசாயம் செய்து, சத்தான காய்கறி பழங்களை மக்களுக்கு அளிப்பது மனம் மகிழ்வாக இருக்கிறது.

தண்ணீர் பிரச்சனை உங்களுக்கு உண்டா?

எனக்கு தண்ணீர் பிரச்சனையே இல்லை. வயலுக்கு அருகே ஒரு போர்வெல் (Bore well) உள்ளதால், எந்நேரமும் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச இயலும். இது தவிர ஒரு கிணறும் உள்ளதால் தண்ணீர்ப் பஞ்சத்திற்கு இடமில்லை. பொதுவாக, 3 நாட்களுக்கு 2 முறை தண்ணீர் பாய்ச்சுவேன். தற்போது மழைக்காலம் என்பதால், மழைப் பொழிவிற்கேற்ப 10 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்சுவேன்.

பப்பாளி விவசாயத்தில் உச்சம் தொட்ட இயற்கை விவசாயி

கால்நடைகள் ஏதேனும் வளர்ப்பது உண்டா?

என்னிடம் 6 பசு மாடுகள் மற்றும் 4 கன்றுக் குட்டிகள் உள்ளது. மாடுகளை வயலிலேயே கட்டி வைத்துள்ளேன். இதனால் மாடுகளின் சாணம் (Cow dung) உரமாக வயல்களுக்கு சென்றடைகிறது. அதுமட்டுமின்றி, தினமும் காலை மாலை இருவேளை கால்நடைகளிடமிருந்து கிடைக்கும் பாலினை (Milk) வேலூரில் உள்ள டோட்லா டைரியில் (Dodla Dairy) விற்பனை செய்கிறேன். விவசாயம் செய்து கொண்டே கால்நடைகளை வளர்ப்பது எளிதாகவும், மிகவும் பயனுள்ளதாகவும் உள்ளது. விவசாயத்தை விரும்பிச் செய்வதால் அதிலுள்ள கஷ்டங்களும், சிரமங்களும் எளிதாக உள்ளது.

கொரோனா காலத்தில் எவ்வாறான சூழ்நிலைகளை எதிர்கொண்டீர்கள்?

கொரோனா வைரஸ் (Corona Virus) பரவி வரும் நிலையில், அறுவடி செய்த காய்கறி பழங்களை விற்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டேன். ஆனால் தற்போது நிலைமை சீராகி ஓரளவு நல்ல நிலையில் விற்பனையாகிறது.

சொந்த உழைப்பையும், மண்ணையும் மூலதனமாகக் கொண்டு விவசாயத்தில் இலாபம் ஈட்டும் வெற்றி நாயகன் உமாபதியின் விவசாயப் பணி சிறக்க வாழ்த்துகள்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க...

மானிய விலையில் விவசாயிகளுக்கு நெல் விதைகள் விற்பனை!!

யாரும் அறிந்திராத வேம்பின் பயன்கள் என்னவென்று தெரியுமா?

உளுந்து பயிரில்அதிக மகசூல் பெற 2% டி.ஏ.பி. கரைசல்!!

pappaya cultivation Success Farmer பப்பாளி சாகுபடி வெண்டைக்காய் கொத்தவரை
English Summary: Umapathy, a natural farmer, has reached the pinnacle of papaya farming

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription


Latest Stories

  1. 200 மெ.டன் உளுந்து கொள்முதல்- முன்பதிவு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு !
  2. தமிழகத்தில் நடப்பாண்டு வடகிழக்குப் பருவமழை சராசரியாக இருக்கும்- TNAUவின் முன்னறிவிப்பு!
  3. பாரம்பரிய காய்கறி சாகுபடிக்கு ரூ.15,000மானியம்- விவசாயிகளுக்கு அழைப்பு!
  4. மிளகாய் வற்றலுக்கு ரூ.9000/- வரை கிடைக்கும்- TNAUவின் விலை முன்னறிவிப்பு!
  5. அங்ககச் சான்று பெறுவது எப்படி? எளிய வழிமுறைகள்!
  6. 100% மானியத்தில் நாட்டு கோழி வளர்ப்பு : பெண் பயனாளிகள் செப்., 29க்குள் விண்ணப்பிக்கலாம்!!
  7. நாடாளுமன்றத்தில் விவசாயம் தொடர்பான 3 மசோதாக்கள் நிறைவேற்றம்! விவசாயிகளுக்கு பயனளிக்குமா?
  8. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் மழை வாய்ப்பு- வானிலை மையம்!!
  9. தென்னையில் இலைக்கருகல் நோய்- தீர்க்க என்ன வழி?
  10. பல சத்துக்களைக் கொண்ட சீம்பால்- கன்றுகளின் ஆரோக்கியத்திற்கு!

CopyRight - 2020 Krishi Jagran Media Group. All Rights Reserved.