2021 சட்டப்பேரவைத் தேர்தலில் குறிப்பிடத்தகுந்த வாக்குறுதியாக அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என்பதை திமுக அறிவித்தது. எனவே, பதவியேற்ற முதல் நாளே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்பொழுதே பெண்களுக்கு மாநகரப் பேருந்துகளில் இலவசப் பயணம் செய்வதற்கான கோப்பில் கையெழுத்திட்டார்.
2021ஆம் ஆண்டு மே 8ஆம் தேதி இந்தத் திட்டம் அமலுக்குக் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் நகர்ப்புறங்களில் வெள்ளை போர்டு பேருந்துகளிலும், கிராமப்புற அரசு பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்யலாம் என்ற அறிவிப்பு வெளிவந்தது.
இந்த திட்டம் ஒன்றரை ஆண்டுகளாகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்ற நிலையில்,கடந்த அக்டோபர் 5ஆம் தேதி வரை இந்த திட்டத்தின் கீழ் 176.84 பயணங்கள் மேற்கொள்ளப்பட்டதாக போக்குவரத்துத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதோடு, ஒரு நாளைக்கு சராசரியாக 39.21 லட்சம் பயணிகள் இந்த திட்டத்தின் கீழ் பயணிப்பதாக புள்ளி விவரம் கூறுகிறது.
இந்த பயணத் திட்டத்தின் மூலம் அன்றாடம் வேலைக்குச் செல்லும் பெண்கள் குறிப்பாக அடித்தட்டு மக்கள் பெரிதும் பயனடைவதாகக் கூறப்படுகின்றது. இந்த நிலையில், இலவச பேருந்து பயணம் திட்டம் மக்களுக்கு எவ்வாறு உதவியாக உள்ளது என்பது குறித்து மாநில திட்டக்குழு ஆய்வு செய்து அதன் புள்ளிவிவரங்களைத் வெளிக்கொண்டுள்ளது. இந்த ஆய்வின்படி, திட்டத்தின் பயனாகப் பெண்கள் மாதம் தோறும் சராசரியாக ரூ.888 மிச்சம் செய்வதாக தெரியவந்து இருக்கிறது.
மேலும்,போக்குவரத்துச் செலவிற்காகப் பெண்கள் குடும்ப உறுப்பினர்களை நம்பியிருக்கும் தேவையும் குறைந்துள்ளது என இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. சிறிய நகரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்களின் சராசரி வருவாய் ரூ.12,000க்கும் குறைவாக உள்ள நிலையில், ரூ.888 என்ற மிச்சத்தொகையை மற்ற குடும்ப செலவுகளுக்கு பயன்படுத்திக்கொள்கிறார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
PM-Kisan 13-வது தவணை எப்போது வெளியாகிறது?
சென்னையில் ஜவுளி நகரம், மகாபலிபுரத்தில் அருங்காட்சியகம்: ஸ்டாலின் அறிவிப்பு!