உடுமலை பகுதிகளில், மக்காச்சோளத்தில் (Maize) படைப்புழு தாக்குதல் குறித்து, வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். உடுமலை பகுதிகளில், தற்போது மக்காச்சோளம் சாகுபடி அதிகளவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
படைப்புழு தாக்குதல்
ஒரு சில பகுதிகளில், படைப்புழு தாக்குதல் காணப்படுகிறது. இதனையடுத்து, திருப்பூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் மனோகர், வேளாண் பல்கலை பூச்சியியல் துறை பேராசிரியர் சண்முகம், வேளாண் உதவி இயக்குனர் தேவி உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர், மக்காச்சோளம் சாகுபடி (Maize Cultivation) செய்யபட்டுள்ள பகுதிகளில் நேரில் ஆய்வு செய்தனர். படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் முறைகள், பொருளாதார சேதநிலையான, 10 சதவீதத்திற்கு மேல் ஏற்பட்டால் மட்டுமே மருந்து தெளிக்க வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகளை விவசாயிகளுக்கு வழங்கினர்.
கட்டுப்படுத்த
வேளாண்துறை அதிகாரிகள் கூறியதாவது: படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த, கடைசி உழவில், ஏக்கருக்கு, 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு இட வேண்டும்.
இதன் வாயிலாக, கூட்டுப்புழுவிலிருந்து, தாய் அந்துப்பூச்சிகள் செயல் இழந்து விடும்; முட்டையிட்டு பல்கி பெருகுவது கட்டுப்படுத்தப்படும்.பெவேரியா பூஞ்சாணவிதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.ஏக்கருக்கு, 5 இனக்கவர்ச்சி பொறிகள், பயிரின் வளர்ச்சிக்கு ஏற்ப கட்டி விட வேண்டும்.வரப்புப்பயிராக, உளுந்து, பச்சைபயறு, சோளம் ஆகியவை, 2க்கு, 4 வரிசை நடவு செய்தால், 20 நாள் பயிரை பூச்சி தாக்குதலிலிருந்து காப்பாற்றலாம்.
20 முதல், 30 நாட்களில், அசாடிராக்டன், 1500 பிபிஎம், மருந்து ஏக்கருக்கு, ஒரு லிட்டர், கைத்தெளிப்பான் வாயிலாக, மட்டுமே தெளிக்க வேண்டும்.40 முதல், 45 நாட்கள் பயிருக்கு, மெட்டாரைசியம், ஏக்கருக்கு ஒரு கிலோ வீதம், 200 லிட்டர் தண்ணீரில் கலந்து, பயிரின் குருத்தில் படியுமாறு தெளிக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் படிக்க
என்ன மரம் வளர்க்கலாம் என்று குழப்பமா? தகவல் தருகிறது புதிய திட்டம்!
நெற்பயிரில் வளர்ச்சியை அதிகப்படுத்தி களைகளை கட்டுப்படுத்தும் அசோலா!