ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியில் 45 நாட்களில் 69 ஆயிரத்து 200 சதுர அடியில் கட்டிய புதிய மருத்துவமனை கட்டிடத்திற்கு, ஆசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சார்பில் சாதனைக்கான விருது வழங்கப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு கொரோனா தாக்கம் அதிகரித்ததை கருத்தில்கொண்டு பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி கொரோனா முழுநேர சிகிச்சை மையமாக மாற்றியமைக்கபட்டது. இங்கு, அண்டை மாவட்டங்களை சேர்ந்த கொரோனா நோயாளிகளும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதனால், போதிய படுக்கைகள் வசதி இல்லாத காரணத்தால் நோயாளிகள் சிரமமடைந்தனர்.
நோயாளிகளின் நலனுக்காக, ஈரோடு மாவட்ட ரோட்டரி சங்கம் ,பல்வேறு சேவை சங்கங்கள், தொழில் நிறுவனங்கள் ஆகியோரின் பங்களிப்புடன் ரூ.14.5 கோடி செலவில் கொரோனா சிகிச்சை மையம் கட்டும் பணி துவங்கியது. 69 ஆயிரம் 200 சதுரடியில், 3 தளங்களில் 401 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டிடம், நவீன தொழில் நுட்பத்துடன் கடந்த மே மாதம் 18ஆம் தேதி கட்டுமான பணி தொடங்கி, ஜூலை 1ஆம் தேதி 45 நாட்கள் கழித்து முடிக்கப்பட்டது.
அதிநவீன ஃபிரீ காஸ்ட் ஸ்லாப்ஸ் முறையில் மருத்துவமனை கட்டியதற்கும், அதிக எண்ணிக்கையிலான படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டிருப்பதாலும், பல்வேறு அமைப்புகளின் சார்பில் சாதனை சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அதில்,உலக அளவில் Elite World Record, ஆசிய அளவில் Asian Book Of Record, தேசிய அளவில் Indian Record மற்றும் தமிழக அளவில் தமிழன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் சாதனைக்கான சான்றிதழை வழங்கியது.
நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஈரோடு ஆட்சியர் கிருஷ்ணன் உண்ணி, மாவட்ட ரோட்டரி சங்கம் மற்றும் பல்வேறு சேவை சங்கங்கள்,மற்றும் தொழில் நிறுவனங்களை சேர்ந்தவர்களும், சாதனை விருதுகளை வழங்கிய நிறுவனத்தினரும் பங்கேற்றனர். அப்போது, கொரானாவின் மூன்றாம் அலை வந்தால், இந்த மருத்துவமனை கொரானா சிகிச்சைக்காக முழுமையாக பயன்படுத்தப்படும், மேலும் பின்னர் சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும் படிக்க:
5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!
தேர்தலில் தோற்றவர் மத்திய அமைச்சர் , வெற்றி பெற்றவர் மாநில அமைச்சர்- இதுதாங்க அரசியல்!
கொரோனாக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றாவிட்டால் தளர்வுகள் வாபஸ்: மத்திய அரசு எச்சரிக்கை!