தமிழ்நாடு அரசின் “மீண்டும் மஞ்சப்பை” செயலியில், சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களின் உற்பத்தியாளர்கள் தங்கள் விவரங்களை பதிவு செய்வதன் மூலம் விற்பனையினை பெருக்க இயலும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்துடன் (TNPCB) இணைந்து, ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதித்த தடையினை கடந்த 2019-இல் இருந்து செயல்படுத்தி வருகின்றது.
தடையினைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிரான தொடர் சோதனைகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைப்பெற்று வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அரங்கத்தில் நடைபெற்ற உலக சுகாதார தினவிழாவில் "மீண்டும் மஞ்சப்பை இணையதளம்" மற்றும் "மீண்டும் மஞ்சப்பை” செயலியானது அனைவரும் பயன்படுத்தும் வண்ணம் தமிழ் மற்றும் ஆங்கில மொழியிலும் வடிவமைக்கப்பட்டு வெளியானது.
சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களின் உற்பத்தியாளர் விவரம்:
தடைசெய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க அதிகாரிகள் மேற்கொண்ட மாவட்ட வாரியான அமலாக்க விவரங்கள், பல்வேறு சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களின் உற்பத்தியாளர்கள் மற்றும் மாவட்ட வாரியாக வகைப்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்பவர்களின் விவரங்கள் மீண்டும் மஞ்சப்பை இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அலுமினியம், பாக்கு மட்டை, கரும்பு சக்கை, மூங்கில், வாழை நார், களிமண், தேங்காய் மட்டை, தென்னை நார், சோளமாவு, நெளி காகிதப் பொருட்கள், பருத்தியிலான பொருட்கள், காகிதம், சணல், தேவதாருமரப் பொருட்கள், வெட்டிவேர் மற்றும் துணி, மரத்தலானப் பொருட்களின் உற்பத்தியாளர்கள் தங்களது விவரங்களை பதிவு செய்துக்கொள்ள இயலும். இதன் மூலம் பொருட்களை வாங்க நினைப்பவர்கள் நேரடியாக செயலியின் மூலமே உற்பத்தியாளர்களை தொடர்பு கொள்ளவும் இயலும்.
மஞ்சப்பை செயலியின் முக்கிய அம்சங்கள்:
- கூகுள் வரைபடத்தின் மூலம் மஞ்சப்பை விற்பனை இயந்திரம் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில் நசுக்கும் இயந்திரம் இருக்கும் இடத்தை அறிந்து கொள்ள பயன்படுகிறது.
- சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை உற்பத்தி செய்பவர்களின் விவரங்களை அறிந்து கொள்ள மற்றும் பதிவு செய்ய பயன்படுகிறது.
- தடைசெய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோர்க்கு எதிராக புகார்களை பதிவு செய்ய பயன்படுகிறது.
- ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தடை தொடர்பான உங்கள் காணொளிகளை பதிவேற்ற உதவுகிறது.
- தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் நடைபெற உள்ள நிகழ்வுகள் மற்றும் அறிவிப்புகளை அறிய உதவுகிறது.
இந்த மஞ்சப்பை இணையதளம்/செயலி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் விவரங்கள், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிகினால் ஏற்படும் தீமைகள் குறித்து நடத்தப்பட்ட விழிப்புணர்வு பிரச்சார விவரங்களை அறிந்த கொள்ள உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
pic courtesy : manjapai app
மேலும் காண்க: