கால்நடை அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு (BVSc மற்றும் AH) இளங்கலை படிப்புக்கான கவுன்சிலிங் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்கும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ மற்றும் கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் (TANUVAS) துணைவேந்தர் கே.என்.செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகம் வழங்கும் BVSc மற்றும் AH படிப்புகள் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை மூன்றாவது வாரத்தில் வெளியிடப்படும் என்றும் துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.
BVSc மற்றும் AH மற்றும் BTech இளங்கலைப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூன் 30-ஆம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பிக்கும் காலம் நிறைவடைந்த பின் தேதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. BVSc மற்றும் AH படிப்புகளுக்கு இதுவரை 15,941 விண்ணப்பங்களும், BTech படிப்புகளுக்கு 3,103 விண்ணப்பங்களும் வந்துள்ளதாக TANUVAS பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு BVSc மற்றும் AH படிப்புக்கு 13,540 விண்ணப்பங்களும், பி.டெக் படிப்புகளுக்கு 2474 விண்ணப்பங்களும் வந்தன.
பல்கலைக்கழகம் உணவு தொழில்நுட்பம், கோழி வளர்ப்பு தொழில்நுட்பம் மற்றும் பால் தொழில்நுட்பம் ஆகியவற்றில் பி.டெக் படிப்புகளை வழங்குகிறது. ஏழு கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் 660 இடங்கள் உள்ளன.
கடந்த ஆண்டை விட, 20 சதவீதம் கூடுதல் விண்ணப்பங்கள் வரும் என எதிர்பார்க்கிறோம் என்று துணைவேந்தர் செல்வகுமார் குறிப்பிட்டுள்ளார். தேவை அதிகம் உள்ளதால், உடுமலைப்பேட்டை மற்றும் தேனி கால்நடை மருத்துவக் கல்லுாரிகளில், தலா, 80 இடங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
மாணவர்கள் விண்ணப்பிக்க போதுமான அவகாசம் கிடைக்கும் வகையில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை ஜூன் -12 ஆம் தேதி அன்றே தொடங்கப்பட்டது என்றார் செல்வகுமார். மேலும், சிறப்புப் பிரிவினருக்கான கவுன்சிலிங், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு மற்றும் பிடெக் படிப்புகளுக்கு தனிப்பட்ட முறையிலும், பொதுப் பிரிவினருக்கு ஆன்லைனிலும் கவுன்சிலிங் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
அக்டோபர் முதல் வாரத்தில் முதல் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரிகளில் வகுப்புகளைத் தொடங்க பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. 7.5% அரசுப் பள்ளி ஒதுக்கீட்டு மாணவர்களுக்கு, இந்த ஆண்டு BVSc-யில் 45 இடங்களும், பிடெக் படிப்புகளில் 8 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு (BVSc & AH) தொடர்பான பட்டப்படிப்பு தமிழகத்தில் 7 கல்லூரிகளில் உள்ளது. மொத்த கல்வியாண்டு ஐந்தரை ஆண்டுகள் (MSVE விதிமுறை 2016-ன் படி, 4 ½ ஆண்டுகள் பட்டப்படிப்பு மற்றும் 1 வருட உள்ளிருப்பு பயிற்சி) என்பது குறிப்பிடத்தக்கது.
சமீப காலமாக பொறியியல் பட்டப்படிப்புகளில் மாணவர்கள் பெரிய அளவில் ஆர்வம் காட்டாத நிலையில் வேளாண், கால்நடை பராமரிப்பு, மீன் வளம் சார்ந்த படிப்புகள் மற்றும் கலை அறிவியல் படிப்புகளினை படிக்க மாணவர்கள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண்க:
கால்நடை மருத்துவ படிப்பிற்கான (BVSc & AH/BTech) மாணவர் சேர்க்கை- முழுவிவரம்!