1. செய்திகள்

சர்வே எண் போதும்- மண்ணின் தன்மையை மொபைலில் கூட தெரிஞ்சுக்கலாம்

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
tamil mannvalam website interface launched by MK stalin

தலைமைச் செயலகத்தில், வேளாண்மை நலத்துறை சார்பில், விவசாயிகள் தங்கள் நிலத்தில் உள்ள மண்வளத்தினை அறிந்து, அதற்கேற்ப உரமிடுவதை ஊக்குவிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள "தமிழ் மண்வளம்" எனும் புதிய இணைய முகப்பினை (http://tnagriculture.in/mannvalam ) முதல்வர் இன்று தொடங்கி வைத்தார்.

மகசூலுக்கு முக்கிய காரணியாக விளங்கும் மண்ணின் வளம் குறித்து ஒவ்வொரு விவசாயியும் அறிந்து அதற்கேற்ப உரமிடுவது மிகவும் அவசியமாகும்.

"தமிழ் மண்வளம்" இணைய முகப்பு:

விளைநிலங்களின் மண்வளத்தை மேம்படுத்தும் வகையில், கடந்த 2022-23 ஆம் ஆண்டு வேளாண்மை நிதிநிலை அறிக்கையில், "தமிழ் மண்வளம்" என்ற இணைய முகப்பு உருவாக்கப்படும் என்று வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் அறிவித்தார். அதன்படி, "தமிழ் மண்வளம்" எனும் இணைய முகப்பினை தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கப்பட்டது.

"தமிழ் மண்வளம்" இணைய முகப்பின் பயன்கள்:

விவசாயிகள் கணினி மூலமாகவோ அல்லது கைபேசி மூலமாகவோ http://tnagriculture.in/mannvalam/  எனும் இணையதள முகவரியில் தமிழ்மண் வளம் இணையதளத்தை அணுகலாம்.

இந்த இணைய முகப்பில், விவசாயிகள் தங்கள் மாவட்டம், வட்டாரம், கிராமம், தங்களது நிலத்தின் புல எண், உட்பிரிவு எண்ணை பதிவு செய்தால், உடனடியாக, மண் வளம் குறித்த அனைத்து விபரங்களும் பதிவிறக்கம் செய்யப்பட்டு, அவர்களது கைபேசியில் மண்வள அட்டையாக மின்னணு வடிவில் கிடைக்கும். இந்த இணைய முகப்பு தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் மண்டல வாரியாகவும் மாவட்டத்தில் உள்ள வட்டாரம் மற்றும் கிராமங்கள் வாரியாகவும் மண்ணின் வகைகள் தரப்பட்டுள்ளன.

மண்ணின் தன்மை, நிலத்தடி நீரின் வகைப்பாடு, உப்பின் நிலை, களர்-அமில நிலை (pH), அங்ககக் கரிமம் (Organic Carbon), சுண்ணாம்புத்தன்மை (Calcareousness) போன்ற வேதியியல் குணங்கள் பற்றிய விபரங்களும், தழை, மணி, சாம்பல் சத்துக்கள் போன்ற விவரங்களும், கந்தகம், இரும்பு, மாங்கனீசு, துத்தநாகம், தாமிரம், போரான் போன்ற நுண்ணூட்டச்சத்துகளின் விவரங்களை தெரிந்துக்கொள்ளலாம்.

மேலும் படிக்க: வேளாண் வணிக திருவிழா: சந்தை வாய்ப்புகளை அதிகரிக்க விவசாயிகளுக்கு ஓர் அரிய வாய்ப்பு

மேலும் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் காடுகள் சார்ந்த எவ்வகை பயிர்களை சாகுபடி செய்யலாம், தேர்ந்தெடுக்கும் பயிருக்கு எவ்வளவு உரமிட வேண்டும் போன்ற பரிந்துரைகளையும் விவசாயிகள் தெரிந்து கொள்ளலாம்.

"தமிழ் மண்வளம்" என்ற இணைய முகப்பு இந்திய அளவில் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டு, நாட்டிலேயே முன்னோடியாக விளங்குகிறது. இந்த இணைய முகப்பின் பயனாக, விவசாயிகள் தங்கள் நிலத்தின் மண் வளத்தை அறிந்து, அதற்கேற்ப உரமிடுவதன் மூலம் சாகுபடி செலவு குறைவதுடன், மண் வளம் காக்கப்பட்டு, பயிர் மகசூல் அதிகரிக்கும்.

இந்த நிகழ்ச்சியில், வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், உதயநிதி ஸ்டாலின், டி.ஆர்.பி.ராஜா, தலைமைச்செயலாளர் இறையன்பு உட்பட அரசுத்துறை உயர் அலுவலகர்களும் கலந்துக்கொண்டனர்.

pic courtesy: mannvalam web

மேலும் காண்க:

2022-23 ஆம் ஆண்டில் தோட்டக்கலை சாகுபடி ரிப்போர்ட்- ஒன்றிய அரசு வெளியீடு

English Summary: tamil mannvalam website interface launched by MK stalin Published on: 28 June 2023, 02:12 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.