எம்.டெக்., படித்த பேராசிரியர், வெளிநாட்டில் ஆளில்லாத போர் விமானம் தயாரிக்கும் நிறுவனத்தில் தரக்கட்டுப்பாடு பொறியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். கொரோனா ஊரடங்கால் அவரது வாழ்க்கை புரட்டிப் போடப்பட்டு, தற்போது மதுரையில் இயற்கை வழி கரும்பு விவசாயியாக மாறியுள்ளார் மோகன்.
கரும்பு விவசாயி (Sugarcane Farmer)
மதுரை மாவட்டம், எழுமலையைச் சேர்ந்தவர் மோகன், 40; வெளிநாட்டில் பொறியாளராக பணிபுரிந்தார். கொரோனா ஊரடங்கு காலத்தில் இங்கு வந்தவர், தன் தந்தையின் தொழிலான விவசாய பணியில் ஈடுபட துவங்கினார். இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டினார். ஈஷா மையத்தில் பயிற்சி பெற்றார். தற்போது இயற்கையான வழியில் கரும்பு பயிரிடும் பணியை செய்து வருகிறார்.
இயற்கை உரம் (Organic Compost)
இரண்டரை ஏக்கரில் மண்புழு உரம், குப்பையால் நிலத்தை பண்படுத்திய பின், தண்ணீர் பற்றாக்குறையை தாங்கி வளரும் கரும்பு பயிரிட்டு, மானிய உதவியுடன் சொட்டுநீர் பாசனம் வசதி செய்துள்ளார். பூச்சிகளை கட்டுப்படுத்த 3ஜி கரைசல் பயன்படுத்தியும், உரங்களுக்கு பதிலாக, ஜீவாமிர்தம், மீன்அமிலம் உள்ளிட்ட இயற்கையான சத்துகளை பயன்படுத்தி கடந்தாண்டு 132 டன் அறுவடை செய்து சர்க்கரை ஆலைக்கு அனுப்பியுள்ளார். அறுவடைக்கு பின் மறுதாம்பாக விடப்பட்ட கரும்பு இந்தாண்டும் விளைச்சல் கண்டுள்ளது.
தற்போது கரும்பை மதிப்புக்கூட்டும் பொருளாக நாட்டுச்சர்க்கரை தயாரிக்க முயற்சித்து வருகிறேன்.
இயற்கையான வழியில் விவசாயம் செய்வதால் நிலத்தின் சத்துக்கள் குறையாமல் தொடர்ந்து மறுதாம்பாகவே கரும்பு வளர்க்கலாம். செயற்கை உரமிடுவதால் 3 ஆண்டுகளில் நிலத்தில் சத்துக்கள் குறைந்து விளைச்சல் குறைந்து போகிறது. செலவும் அதிகமாகும். தற்போது மக்களிடையே இயற்கை வழி விவசாயத்தில் உற்பத்தி செய்யப்படும் உணவு பொருட்களுக்கு வரவேற்பு கிடைத்து வருகிறது.
அதே போல் நாட்டுச்சர்க்கரைக்கும் நல்ல விலை கிடைக்கிறது. இயற்கையாக விளைவிக்கப்பட்ட கரும்பில் நாட்டுச்சர்க்கரை உற்பத்தி செய்தால் தங்களுக்கு கொடுக்க வேண்டும் என இப்போதே கேட்க ஆரம்பித்துள்ளனர்.
மேலும் படிக்க
சோலார் பம்பு செட் அமைக்க 20% மானியம்: விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்!